தை மாதம் நாளை பிறக்கிறது, தை மாதத்தில் இருந்து உத்ராயண புண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதற்கான காரணம் தெரியுமா?
'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்றும் 'அயனம்' என்றால் வழி என்றும் பொருளாகும். சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாக போற்றப்படுகிறது.
மகாபாரதத்தில் பீஷ்மர் மோட்சம்
பீஷ்மர் தனது தந்தையாகிய சந்தனுவிடமிருந்து தான் விரும்பினால் மட்டுமே சாகக் கூடிய 'இச்சா மிருத்யு' என்னும் வரத்தை பெற்றிருந்தார். அவர் அனுமதி கொடுக்காவிட்டால் மரணம் கூட அவரை அணுக முடியாது. பாரதப் போரில் பீஷ்மர் உடல் முழுவதும் அர்ஜுனன் எய்த அம்புகள் ஒரு அங்குலம் இடை வெளிகூட இல்லாமல் பாய்ந்திருக்க, கீழே சாய்ந்த பீஷ்மர் உடனே மரணம் அடையவில்லை. தான் பெற்றிருந்த வரத்தை உபயோகப் படுத்தி மரணத்தை உடனே தன்னை நெருங்க விடாது தடுத்திருந்தார். ஏனென்றால் பாரதப்போர் மார்கழி மாதம் தட்சிணாயன காலத்தில் நடைபெற்றது. இக்காலத்தில் மரணம் அடைந்தால் மறுபிறவி உண்டு என்பதால், அம்பு படுக்கையில் இரத்தம் சொட்டச் சொட்ட உத்தராயண காலம் ஆரம்பிக்கும் வரை தனது உயிரை விடாமல் நிறுத்தி வைத்து, உத்தராயண காலம் தை மாதம் 1 -ஆம் தேதி ஆரம்பமானவுடன் மரணமடைந்தார். இதிலிருந்தே இந்த உத்தராயண காலம் எவ்வளவு புனிதம் வாய்ந்தது என்பது தெளிவாகும். தை மாதம் 1 -ஆம் தேதியன்று உத்தராயணம் ஆரம்பிப்பதைதான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறுவடை காலம் முடிந்ததும்
இந்த பழமொழிக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது. வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும். மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும் என்பதையே இவ்வாறு கூறியுள்ளனர்