திரு ஜோ.மகேஷ்வரன் என்பவர் எழுதியுள்ளார்


வடுவூரில் பிறந்திருந்தாலும்,இதில் இருக்கும் பல விஷயங்கள் எனக்கும் புதிது தான்.


திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அது என்ன வடுவூர் சிலை அழகு....அறிந்து கொள்ள தொடருங்கள்..... திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.

இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார்.

ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார்.

சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார்.

இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

1.வடுவூர் & பெயர்காரணம்

இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.

2. பிற சிறப்புகள்:

இந்த ஆலயத்தின் உள்ளே கல்விக் கடவுளான ஹயக்கிரீவர் கோயில், 500 ஆண்டுகள் பழமையான தேசிகர் சிலை உள்ளது. ஹயக்கிரிவரை வணங்கி சென்ற எந்த மாணவரும் தேர்வில் பின்தங்கியதில்லை என்பது நம்பிக்கை. கோயில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ராமாயண காட்சிகளை விளக்கும் திருத்தேர், அந்த தேரடியில் ஸ்ரீ ராமர் பாதம் நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ ஹனுமன், கோயிலுக்கு அருகில் உள்ள வடுவூர் வடபாதி கிராமத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிறப்பு பெற்ற கைலாச நாதர் கோயில் ஆகியவை உள்ளன. கிழக்கே 12 கி.மீ தொலைவில் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில், மேற்கே 24 கி.மீ தொலைவில் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர்), 40 கி.மீ தொலைவில் கோவில் நகரமாம் கும்பகோணம் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொடுத்து உதவிய திரு ஜோ.மகேஷ்வரனுக்கு மிக்க நன்றி.

மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை

மீனவர் வீசிய வலையில் ஐம்பொன் சாமி சிலை சிக்கியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெய்வாசலை சேர்ந்தவர் செல்வராஜ் (40). மீனவர் இவர் நேற்று முன்தினம் வடுவூர் ஏரியின் மேற்கு பகுதியில் கண்ணனாற்று பாலத்தில் மீன் பிடிக்க வலை வீசியிருந்தார்.
அப்போது 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சாமி சிலை சிக்கியது. அதை வெளியில் எடுத்து பார்த்தபோது பழைமை வாய்ந்த கிருஷ்ணன் சிலை என்பது தெரிந்தது. இது குறித்து செல்வராஜ் வடுவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் சிலையை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
பின்னர் மன்னார்குடி தாசில்தார் முருகேசனிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. தொல்பொருள் துறை ஆய்வுக்கு பிறகே சிலையின் மதிப்பு எவ்வளவு என தெரியவரும் என்றார் தாசில்தார். வடுவூர் ஏரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் சாமி கோயிலில் தற்போது இராம நவமி விழா நடந்து வருகிறது. இந்நிலையில் பழமையான கிருஷ்ணர் சிலை ஏரியில் கிடைத்திருப்பது பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உயிர் உருக்கும் நினைவுகள்...!



வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

சின்னதாய் உடல்சுட்டாலும்
பதறியடித்துப் பண்ணும் காரியங்கள்
ஆக்கினைதான் என்றாலும்
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

உப்பும், மிளகாயும்
ஒன்றாய்ச் சேர்த்து
மூன்றுமுறை தலைசுற்றி
தூ,தூ எனத்துப்பி
அடுப்பினுள் போட்டு
அதுவெடிக்கையில்
கண்ணூறு கழிந்ததாய்
களிகொள்வாள்

வயிற்றுவலி வந்தால்
சாமிமுன்னின்று
மந்திரம் சொல்லி
வலிகொண்ட இடத்தில்
திருநீறு தடவி
ஆ.. காட்டச்சொல்லி
அதற்குள்ளும் தூவி
அடுத்தகணமே மாறுமென
ஆனந்தங்கொள்வாள்


இப்படிச்
சொல்லிக் கொண்டேபோகலாம்
சுகப்படுத்தும் வழிமுறைகளை

உயர் கல்விக்காய் நான்
ஊர்விட்டகலையில்
கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில்
உயிர் உருக்கும் அவள் நினைவுகள்