திருப்புமுனை.....

முதலில் ஒரு கதை. நல்லவன் ஒருவனின் பெட்டியை, ஒரு திருடன் தூக்கி கொண்டு ஒடுகிறான். திருடனை அவன் வீட்டுக்கே சென்று விரட்டி பிடிக்கிறான். நல்லவன், "திருடுவது மகாபாவம்" என்று பாடம் எடுக்கிறான். கெட்டவனோ, "நல்லதுக்கெல்லாம் காலமில்ல. நீயும் என் கூட சேர்ந்து திருடனாயிடு" என்கிறான். நல்லவனாக இருப்பதிலுள்ள அருமை பெருமைகளை நல்லவன் சொல்கிறான். நல்லவனாக இருப்பதில் உள்ள பாதகங்களை இவன் சொல்கிறான். கொஞ்ச நேர உரையாடல்களில் இருவரும் நண்பராகி விட, அன்றைய இரவு திருடன் வீட்டிலேயே நல்லவன் தூங்குகிறான்.

அவன் எடுத்த பாடம் இவனையும், இவன் எடுத்த பாடம் அவனையும் யோசிக்க வைக்கிறது. நல்லவனாக வாழ்ந்து என்ன சுகத்தை கண்டோம் என்று அவனும், கெட்டவனாக வாழ்ந்து என்ன நன்மையை பெற்றோம் என்று இவனும் யோசிக்கின்றனர். விளைவு. திருடன் திருந்திவிடுகிறான். நல்லவன் திருடனாகிறான். இரண்டு பேர் வாழ்விலும்

அன்றைய தினமும், அந்த சந்திப்புகளும் மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைகிறது. மேற்கண்ட கதை ஒரு திரைப்பட காட்சி.
திருப்புமுனை என்பது மிக மிக அழகான வார்த்தையாகவே கருதுகிறேன். நல்லவன், அந்த திருடனை சந்திக்காமலே இருந்து இருந்தால், ஒரு வேளை நல்லவனாகவே இருந்து இருக்கக்கூடும். திருடன், நல்வவனை சந்திக்காமல் இருந்து இருந்தால், ஒரு வேளை திருடனாகவே வாழ்க்கையை தொடர்ந்து இருக்கக்கூடும். ஒருவனுக்கு அழகான திருப்புமுனை. மற்றவனுக்கோ சொல்லிக்கொள்ளும் விதமாக அமையாத திருப்புமுனை.

மனித வாழ்வில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், எல்லோரும் ஒரு திருப்பு முனையை சந்திக்கின்றனர். சிலருக்கு நல்ல விதமாக அமைந்து, வாழ்வில் மிகப்பெரிய உயர்வுக்கு வழி வகுக்கும். சிலருக்கு அமையும் திருப்புமுனையே, மகிழ்ச்சியூட்டும் விதமாக அமையும். இன்னும் சிலருக்கு தங்களுக்கு கிடைத்த திருப்புமுனையை பயன்படுத்த தெரியாமல்

போய்விடும். தவறான திசை நோக்கி அழைக்கும் திருப்புமுனையாக இருப்பின், நாம் தான் அதை உணர வேண்டும். திருப்புமுனை என்பது நன்மை பயக்க மாத்திரமே என்று நினைத்து விடக்கூடாது.. நம்மை கவிழ்க்கவும் செய்யலாம்.
உயிர் காக்கும் மருந்தே சில நேரம் உயிர்கொல்லியாகவும் உள்ளதே. திருமணம் சிலருக்கு திருப்புமுனையாக அமையும். பாடம் எடுக்கும் ஆசிரியரால் வாழ்வில் திருப்புமுனை ஏற்படலாம்.. ஏன் படிக்கின்ற புத்தகங்கள் கூட, நம் வாழ்வில் திருப்புமுனையை தரலாம். நல்ல நண்பர்கள் கூட திருப்புமுனைக்கு காரணமாகிறார்கள். காந்திஜி, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை என்று சொல்லலாமே.

ஒரே ஒரு திருப்புமுனை, நம் வாழ்வின் ஒரு மையப்புள்ளியாக இருந்து, மொத்த ஏற்ற இறக்கங்களை அல்லது இறக்க ஏற்றங்களை சரி செய்பவனவாக உள்ளன. நாட்டில் திருப்புமுனையை விதைத்த அரசியல்வாதிகள் நிறைய இருக்கிறார்கள். மனிதகுல நாகரிகத்தையே மாற்றியமைத்த திருப்புமுனைகள் உள்ளன. மனிதனுக்கு ஆடை உடுத்த வேண்டும் என்கிற ப்ரக்ஜை வந்தது ஒரு திருப்பு முனை.

மனித வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு திருப்புமுனையும், அவனை இன்னொரு முக்கிய இடத்திற்கு தான் அழைத்து சென்று இருக்கிறது. ஆதிகாலத்தில் இருந்தே மனிதன், திருப்புமுனைகளை சரியாகவே பயன் படுத்தி உள்ளான். பயன் படுத்தாமல் போய் இருப்பின், மிருகங்களோடு மிருகங்களாய் வாழ்ந்து இருக்க்கூடும். மின்சாரமும், வாகன கண்டு பிடிப்புமே மொத்த உலக போக்கையே மாற்றிய திருப்புமுனைகள்..

மதம் மனித வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை என்று சொன்னால் அது மிகையாகாது. அது மனிதனை ஆக்கவும், அழிக்கவுமான சக்தியாக உள்ளதே. ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஏதாவது ஒரு திருப்பு முனையை தரக்கூடியவையே என்று நம்பலாம். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சாதுர்யம் நமக்கு வேண்டும். திருப்புமுனை என்கிற வார்த்தையே கம்பீரமானதாய் தோன்றுகிறது. நம்மை ரட்சிக்க வந்த வார்த்தையாகவே தோன்றுகிறது.