நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா...?


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து.

ஆய்வு: ஐம்பத்து ஏழு வயதான ஒருவருக்கு, தோள் மூட்டில் கடுமையான வலி இருந்தது. கைகளை முழுவதுமாக தூக்க முடியவில்லை. அவருடைய உணவு வழக்கத்தில், கொழுப்பற்ற அல்லது மிகக் குறைந்த கொழுப்பே இருந்தது. கறிகாய்களை மிக அதிக அளவிலும், மிளகாய்களை அதிகமாகவும் உண்ணும் பழக்கம் இருந்தது. அவருக்கு ரத்தக் கொழுப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், நெய்யைச் சேர்க்காமலும், எண்ணெய் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாமலும், மிகவும் கவனமாக இருந்தார். நவீன மருத்துவத்தில் அவருக்கு ரத்தக் கொழுப்பினைக் குறைக்க, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இதுவரையில், அவர் அதை எடுக்கத் தொடங்கவில்லை. அவருடைய நடைமுறைகள் மற்றும் வழக்கங்களை வறண்ட மற்றும் கொழு ப்பு / எண்ணெய் பசையற்ற உணவு, குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளில் வேலை, (மிளகாய் நிறைந்த) காரமான உணவு, அடிக்கடி பிரயாணம் போன்றவற்றால் வாயு மிகவும் சீற்றமடைந்ததால், தோளில் வலி கடுமையாக இருந்தது. மேற்கூறிய முரணான வழக்கங்களை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிகிச்சையாய், உட்கொள்ளுவதற்கு நெய் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில், வேளைக்கு 15 ட்டூ கொடுக்கப்பட்டது. நெய் என்ற பெயரைக் கேட்டவுடனேயே அவர் கவலைப்பட்டார். தன்னுடைய ரத்தக் கொழுப்பின் நிலை என்ன ஆகுமோ என பயந்தார். சீற்ற மடைந்த வாயுவினால் பாதிக்கப்பட்ட தோளுக்கு, இதுவே உகந்த மருந்து என்று, திரும்பவும் உறுதிப்படுத்தப்பட்டது.

அடுத்த ஐந்து வாரங்களுக்கு, அவர் நெய் மருந்தை ஒழுங்காக உட்கொண்டார். உணவிலும் நெய் சேர்த்துக் கொண்டார். 5-6 வாரங்களில், ஏறக்குறைய ஒரு கிலோ, நெய் மருந்தாகவும், உணவாகவும் உண்டு முடித்தார். இதற்குள் அவர், ரத்தக் கொழுப்பு அளவினைக் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்தார். லிப்பிட் புரொஃபைல் (Lipid profile)எனும் சோதனையை எடுத்த போது, ஆச்சரியப்படும் வகையில் அவருடைய கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசராய்டு அளவுகள், நெய் மருந்தால் குறைந்ததாகத் தெரிந்தது.

சோதனையின்படி, எல்லா அளவுகளும் விரும்பத்தக்க அளவுகளுக்கு குறைவாகவே உள்ளன. எல்.டி.எல் (LDL) சிறு அளவு குறைந்தாலும், விரும்பத்தக்க அளவைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. ரத்தக் கொழுப்பு குறைந்தது நெய் மருந்தை உட்கொண்டதால், வாயுவினால் ஏற்பட்ட வலி தீர்ந்ததுடன், ரத்தக் கொழு ப்பும் குறைந்தது. நெய் அனேக சிறந்த குணங்களைக் கொண்டது . நெய் அறிவு, ஞாபக சக்தி, நுண்ணறிவு, ஜீரண சக்தி, பலம், ஆயுள், விந்து, கண்பார்வை இவற்றை அதிகரிக்கும். சிறுவர், முதியோர், மகப்பேறு, உடல் ஒளி, மிருதுத் தன்மை, குரல் இவற்றுக்குச் சிறந்தது. மார்புவலி, உடல் இளைப்பு, அக்கி என்னும் தோல் நோய், ஆயுதம், நெருப்பு இவற்றால் துன்புற்ற உடல் போன்றவற்றுக்கும் சிறந்தது. வாதம், பித்தம், நஞ்சு, மனக்கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளிவின்மை, காய்ச்சல் ஆகியவற்றை நெய் நீக்கும். நெய் இத்தனை நல்ல குணங்களையுடையது. இவ்வளவு சிறந்ததோர் உணவை, இன்றைய மக்கள், இது ஒரு கொழுப்பு என்று ஒதுக்கி விட்டனர்