பொதிகைமலை ஆன்மீக பயணம்

பொதிகைமலை நோக்கி ஆன்மீக பயணம் மர்மங்கள் அதிசயங்கள் நிறைந்த திருநெல்வேலி : திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 1868மீட்டர் அதாவது 6129 அடி உயரத்தில் உலக நன்மைக்காகத் தவமிருக்கும் அகத்தியரை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்ய ஆர்வம் உடையவரா நீங்கள்...!? அகத்தியர் வாழ்ந்து வரும் தென்றல் தவழும் பொதிகை மலையை அகத்தியர்மலை என்று அழைக்கிறோம்.அகத்தியர் வாழும் இப்பொதிகைமலையில் கடல்மட்டத்தில் இருந்து 6132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்க செல்வதை சாகசப்பயணம் என்றும் கூறலாம். அபூர்வ மூலிகைகள் மனதை கவரும் அருவிகள் சிற்றோடைகள் ஆறுகள் எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் புல்வெளிகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகைமலை இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை. புலிகளின் பொற்காடு இந்த மலைகளில்தான் இந்தியாவிலேயே அதிக புலிகள் இருந்தது. இது புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டது. புலிகள் உள்பட காட்டு விலங்குகள் அதிகம் இருப்பதால் இம்மலை ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக ஏறக்கூடியது அல்ல. பொதிகை மலையை எப்படி அடைவது? பொதிகை மலை அல்லது அகத்திய மலையில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷங்களைத் தேடி இரண்டு வழிகளில் இம்மலையை அடையமுடியும். அவை தமிழ்நாட்டின் திருநெல்வேலி வழி, கேரளத்தின் திருவனந்தபுரம் வழி. திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்! இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது! திருநெல்வேலி வழியாக மலையை அடைய வனத்துறை தடை விதிக்க என்ன காரணம் ?மரங்கள் அடர்த்தி, மற்றும் விலங்குகளின் புகலிடமாதலால், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பிறகு இந்த மலையில் நடமாடக்கூடாது என்பது சட்டம். மேலும் சிறப்பு அனுமதி பெற்று காடுகளில் சுற்றித் திரியலாம். ஆனால் அந்த அனுமதி அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை. வனவிலங்கு ஆர்வலர்கள், விலங்குகள் கணக்கெடுப்பாளர்கள் மட்டுமே சென்று வரமுடியும். கேரளத்தின் வழி டிரெக்கிங் கேரளமாநிலம் திருவனந்தபுரம் வழியாக இம்மலையை அடைவது சற்று சுலபம் என்றாலும், அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வருடத்தில் ஒரே ஒரு முறை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சீசன் வருகிறது. அப்போது கேரள வனத்துறை இந்த மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் சுலபமாக அல்ல. அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. மழைக்காலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மற்ற நேரங்களில் இதுபோன்ற பயணங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. சரி நாமும் மலையேறலாமா? இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக "eco-tourism சூழலியல் சுற்றுலா"-வாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர்! இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் வட்டியூர்காவு PTP நகரிலுள்ள கேரள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு கட்டணத்துடன் கூடிய அனுமதி ஒவ்வொரு ஆண்டும் January February ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது! தை மாதம் மகரவிளக்கு நாளிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே பயணம் செய்ய இயலும்!14 வயதிற்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண்கள் பெண்கள் இருபாலரும் பயணம் செய்யலாம்! www.forest.kerala.gov.in serviceonline.gov.in/trekking எனும் வலைதளத்தில் சென்று online-ல் booking செய்து பயணம் செய்யலாம்! முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தினமும் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்! கேரளத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு Nedumangadu - விதுரா Vithura - Bonacaud போனக்காடு Bonakkad பஸ்சில் பயணிக்கலாம்! திருவனந்தபுரத்திலிருந்து தினமும் அதிகாலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம்.போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் Bonacaud Picket Station போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடம் வரும்.அங்கிருந்து தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது.இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டிகளுடன் இரண்டு அல்லது மூன்று நாள் பொதிகை மலை ஆன்மிக நடைப்பயணம் தொடங்கும்! போனக்காட்டில் காலை 8 மணிக்கு பயணம் ஆரம்பமாகும்! பயணம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது! சுமார் 8 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் மாலை வேளையில் Athirumalai Estate அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்! அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர்! மறுநாள் அதிகாலையிலேயே அகத்தியக் குறு முனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, "அதிருமலை"யின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு அடுத்த 8 கி.மீ.க்கான அடுத்தக்கட்ட ஆன்மிக நடைபயணம் ஆரம்பமாகும்.சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு! இரண்டாம் நாள் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நுழைவோம். பொதிகை மலைக்கு வருவோரை வரவேற்கும் திருநெல்வேலி மாவட்டம் : அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு, மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான நெல்லை மாவட்டம் "சங்கு முத்திரை" என்ற இடம் வரவேற்கும்!இரண்டாம் நாள் பயணம் அடுத்த நாள் பயணம்தான் முதல் நாளை விட சவாலானது. பின்னாடி வரும் நபரையே முகம் தெரியாதமாதிரி ஆக்கிவிடும் இங்குள்ள மேகங்கள். அந்த உயரத்துக்கு மேல் அனைத்தும் மேகங்கள்தான். குளிரைத் தாங்கிக்கொண்டு, சரிவான பாதைகளில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பயணிக்கவேண்டும் இரண்டாம் நாள் நெல்லையின் சிகரத்தை நோக்கி நடைப்பயணம் சங்குமுத்திரை இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் சங்கு முத்திரை. கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை" என்று கூறுகின்றனர்.இந்த சங்குமுத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான "பொருநை" என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் "பூங்குளம்" என்ற சுனை தெரியும்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தைத் தொடர வேண்டும்! செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளைப் (ரோப்-Rope) பிடித்துக் கொண்டு (ஒருபுறம் கால் சிறிது இடறினால் கூட கிடுகிடு அதள பாதாளத்தில் விழ நேரிடும்) மிகவும் கவனத்துடன் நான்கு கால்களையும் ஊன்றி நிதானமாக ஏறிச் சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 6129 அடி அதாவது 1868 மீட்டர் உயரமுடைய "பொதிகை மலை" உச்சியை சிகரத்தை நாம் அடையலாம்! பொதிகை மலை உச்சியில் குறுமுனி அகத்தியரைப் போலவே மிகவும் குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது... நாம் மிகவும் சிரமப்பட்டு மலை ஏறி வந்த சிரமங்கள் எல்லாம் மறந்து, இந்த அதி அற்புதமான நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் வந்தாரை வாழ வைக்கும் சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய அகத்தியர் பெருமானின் ஆனந்தத் தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்கின்ற உச்சக்கட்ட பரவச நிலை உண்மையான பக்தர்களாகிய நமக்குத் தோன்றும்! ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர் திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு பலத்தக் குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும்! ஆன்மிக மணமும் மனமும் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியப் பெருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து வழிபாடு செய்த பின்னர் உள்ளம் நிறைவுடன் மீண்டும் நம் இல்லம் நோக்கியப் பயணம் இனிதே ஆரம்பமாகும்! அகத்தியர் மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, சுமார் மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அதிருமலை கேம்ப் ஷெட்டில் உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் இரவு 7 மணிக்கு அங்கே கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்! முதல் நாள் இரவைப் போலவே, இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்! மிகவும் வேகமாக நடைபயணம் செய்பவர்கள் சிலர் இரண்டாம் நாள் அதிகாலையிலேயே புறப்பட்டு அகத்தியரைத் தரிசித்து விட்டு விறுவிறுவெனக் கீழிறங்கி அதிருமலையிலிருந்தும் கீழிறங்கி போனக்காடு பிக்கெட் ஸ்டேஷன் வந்தடைவோரும் உண்டு! இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமானக் காற்று, மூலிகை கலந்த நீர் இவையெல்லாவற்றையும் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்! உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும்! ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க் குறுமுனி அகத்தியர் பெருமானைத் தரிசிக்க ஜனவரி மாதம் தை மாதம் மகரவிளக்கு முதல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மாசி மாதம் சிவராத்திரி வரை அனுமதி வழங்கப்படுகிறது! நேரிலும் ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைப் பெறலாம்! www.forest.kerala.gov.in serviceonline.gov.in/trekking ஆகிய website-ல் apply பண்ணலாம்! இந்த 2022-ஆம் ஆண்டிற்கான பயணத்தில் பொதிகை மலை செல்ல விரும்புகிறவர்கள் ஆன்லைனிலும் நேரில் சென்று கேரள வனத்துறையிலும் பதிவு செய்யலாம் எனக் கேரள வனத்துறை அழைப்பு விடுத்திருந்தது .தற்போது கொரனா காரணமாக பொதிமலை யாத்திரை முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 1100-ம் இந்தியர் அல்லாத வெளிநாட்டவராக இருப்பின் ரூபாய் 2200-ம் அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படும்.ஒன்று முதல் ஐந்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 50 ரூபாயும் பத்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 70 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும்!அதி அற்புதங்கள் ஆனந்தங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களைக் காணக் கிடைக்கும் ஒரு புதிய இனிய ஆன்மிக பயண அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக பொதிகை மலைக்கு உடனடியாகக் கிளம்பி விடலாம்! குறிப்பு :மிகவும் அடர்த்தியான மரங்கள் இருப்பதனால் பட்டபகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களும் இங்குள்ளன. ஏறுவதற்கு கடுமையான பாறைகளும் இருப்பதால், முடிந்தவரை வயதானவர்கள் இங்கு செல்வதை தவிர்க்கவேண்டும். பொதிகை மலை பயணம் தொடரும். பொதிகைமலை சிறப்புகள் குறித்து அடுத்த பதிவில்