வாழ்க்கை

*ஸ்வேதா என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.* ஆகாஷ் என்பவர் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் ஸ்வேதா என்று தான் வரும். எனினும் இப்பொழுது ஸ்வேதா என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும் ஆகாஷ் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும் நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா? ஆம் நிச்சயமாக இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்! மறுபடி இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது... உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா? ஆமாம் இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம். மேலும் ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும் போது மீண்டும் இந்த பதில் மாறும். இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்! இதேபோல ஆகாஷ் பற்றியும் ஸ்வேதா பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம். இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம். வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும். ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும் பொருளும் வேறாக இருக்கலாம். ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்! எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். அதைத் தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் தான் உயர்ந்தவர்கள்! நீங்கள் தான் சிறந்தவர்கள்!! உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!! எப்போதும் ஆரோக்கியமாக இருங்கள்! அமைதியாக இருங்கள்! திருப்தி அடைந்தவராக இருங்கள்!!! புன்னகையைப் படர விடுங்கள்! மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்!! சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்!!!

எது_இல்லாமல்_எது_கெடும்

#. பாராத பயிரும் கெடும். பாசத்தினால் பிள்ளை கெடும். கேளாத கடனும் கெடும். கேட்கும்போது உறவு கெடும். தேடாத செல்வம் கெடும். தெகிட்டினால் விருந்து கெடும். ஓதாத கல்வி கெடும். ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். சேராத உறவும் கெடும். சிற்றின்பன் பெயரும் கெடும். நாடாத நட்பும் கெடும். நயமில்லா சொல்லும் கெடும். கண்டிக்காத பிள்ளை கெடும். கடன்பட்டால் வாழ்வு கெடும். பிரிவால் இன்பம் கெடும். பணத்தால் அமைதி கெடும். சினமிகுந்தால் அறமும் கெடும். சிந்திக்காத செயலும் கெடும். சோம்பினால் வளர்ச்சி கெடும். சுயமில்லா வேலை கெடும். மோகித்தால் முறைமை கெடும். முறையற்ற உறவும் கெடும். அச்சத்தால் வீரம் கெடும். அறியாமையால் முடிவு கெடும். உழுவாத நிலமும் கெடும். உழைக்காத உடலும் கெடும். இறைக்காத கிணறும் கெடும். இயற்கையழிக்கும் நாடும் கெடும். இல்லாளில்லா வம்சம் கெடும். இரக்கமில்லா மனிதம் கெடும். தோகையினால் துறவு கெடும். துணையில்லா வாழ்வு கெடும். ஓய்வில்லா முதுமை கெடும். ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும். அளவில்லா ஆசை கெடும். அச்சப்படும் கோழை கெடும். இலக்கில்லா பயணம் கெடும். இச்சையினால் உள்ளம் கெடும். உண்மையில்லா காதல் கெடும். உணர்வில்லாத இனமும் கெடும். செல்வம்போனால் சிறப்பு கெடும். சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும். தூண்டாத திரியும் கெடும். தூற்றிப்பேசும் உரையும் கெடும். காய்க்காத மரமும் கெடும். காடழிந்தால் மழையும் கெடும். குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும். குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும். வசிக்காத வீடும் கெடும். வறுமைவந்தால் எல்லாம் கெடும். குளிக்காத மேனி கெடும். குளிர்ந்துபோனால் உணவு கெடும். பொய்யான அழகும் கெடும். பொய்யுரைத்தால் புகழும் கெடும். துடிப்பில்லா இளமை கெடும். துவண்டிட்டால் வெற்றி கெடும். தூங்காத இரவு கெடும். தூங்கினால் பகலும் கெடும். கவனமில்லா செயலும் கெடும். கருத்தில்லா எழுத்தும் கெடும்.