வடுவூர் இராமர்

கோயில் பெயர்      : அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,வடுவூர்
இறைவன் பெயர் : கோதண்டராமர்
தலமரம்                      : மகிழம்
தீர்த்தம்                        : சரயு தீர்த்தம்
நகரம்                           : வடுவூர் - திருவாரூர்
விழாக்கள்                  : ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
பூசை நேரம்              : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
சிறப்புகள்                  :மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார். ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.
மற்ற தகவல் :முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ்தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது. பிரார்த்தனை ராமரிடம் வேண்டிக்கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை
 
இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.


மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!


தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்


கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே
என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ.




ஸ்ரீராம நாம மகிமை

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரி.  ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே,  ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.

அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்..

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!



வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது யார்?.........உள்ளூர்மக்கள்தான். முதலில் வெடிவெடிக்காமல் இருக்க பழகிக்கணும்.
அப்புறம் பறவைக்கறி கேட்கும் நாக்கையும் கொஞ்சம் அடக்கி வைக்கணும்........வைக்கிறார்கள்.
எல்லாம் காரியமாகத்தான்.
ஏரித்தண்ணீர் பாயும் பச்சை நெல்வயல்களுக்கெல்லாம் இலவச உரம் சப்ளை செய்வது விருந்தாளிப்பறவைகள் தான்.



ஊருக்குள் பத்து, இருபது வெளிநாட்டுக்காரர்கள் பைனாகுலரோடு வந்தால் நாலு குலை இளநியும் இரண்டு கூடை வெள்ளரிக்காயும் விற்கலாம். பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பீஸ் கட்டலாம். உள்ளூர்காரன் வந்தால் கதையே வேறு. மூட்டையைப்பிரித்து புளிசாதம் சாப்பிடுவான். தண்ணீர்பாக்கெட்டை சப்பிக்குடித்துவிட்டு பிளாஸ்டிக் உறையை கருவேல மரத்தைப்பார்த்து விட்டெறிந்துவிட்டுப்போவான்.


பறவைகளின் பெயரெல்லாம் வேண்டுமா? குறித்துக்கொள்ளுங்கள்.....Ibis, Painted Stork, Grey Pelican, Pintail, Comorant,Teals, Herons, River ternm, Black-headed munia,Grey heron, White-breasted kingfisher, Spotted Dove etc....etc...வடுவூர் ஏரி பெரியது. மேட்டூர் தண்ணீர்தான். கூடவே வடகிழக்கு பருவமழையும் ஒத்தாசை செய்தால் பறவைகளுக்கு கொண்டாட்டம். பறவை போடும் எச்சங்களால் மீனுக்கு கொழுக்கும்வரை கொண்டாட்டம். பறவைகளின் அலகில் சிக்கும்போதுதான் திண்டாட்டம்.


ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவையின விருந்தாளிகள் வடுவூர் ஏரியில் சுகமாக இருக்கலாம். ஒரு நவம்பர் மாதம் எடுத்த கணெக்கெடுப்பில் 20,000 பறவை விருந்தாளிகள் வந்திருந்தார்களாம்.
அப்புறம் கோடை.
ஏரியில் வெள்ளரிக்காயும் பறங்கிக்காயும் விவசாயம் நடக்கும்.
வந்தாரை வாழ வைக்கும் வடுவூர் என்றால் சரிதானே?
பறவைகளைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களுக்கு இங்கே இரவு தங்க வசதிஉண்டு. அதுவும் கொஞ்ச பேருக்குத்தான்.....
வசதியா தங்கணும்னா தஞ்சாவூருக்கு போயிடுங்க.


பறவைகளைப்பார்க்க இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன.
காசெல்லாம் கிடையாதுங்க.............எல்லாம் இலவசம்.
இது சம்பந்தமா பேசணுமா.........குறிச்சுக்குங்க....




178 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் குடியிருக்க கருவேல மரங்கள் தான் அதிகம். 1.5 கிலோமீட்டர் நடைபாதை நம்மை புகலிடத்திற்குள் கொண்டு போகும். காட்டுக்குள் போவது போன்றதொரு உணர்வு. ஏரியின் பின்புலத்தில் கோதண்டராமசாமி கோயில். வடகிழக்கு பருவமழை வரும்போது பறவையின விருந்தினர்கள் வரத்தொடங்கிவிடுவார்களாம். வட இந்தியா, மத்திய ஆசியா, திபெத், ரஷ்யா இங்கிருந்தெல்லாம் விருந்தினர்கள் வலசை வருவதாக காப்பாளர் வீராச்சாமி உங்களுக்கு சொல்லும்போது உங்களுக்கு வியப்பால் வாய் விரியும். அவர் சொல்லுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் காப்பாளர் வீராச்சாமி 1990 ல் இருந்து வடுவூர் ஏரியின் வரலாறு அறிந்தவர்.



கருவேலமரத்தின் பச்சைஇலைப்பின்னணியில் ஒருஜோடி நீர்வாத்துக்கள் மல்லாந்து இறக்கைவிரித்துப்படுத்திருப்பதை நீங்கள் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
திருப்தியாக சாப்பிட்டுவிட்டதற்கு அடையாளம் அது.
திருப்தியாக சாப்பிட்டுவிட்டு மல்லாந்து படுக்க மனிதனுக்கு நேரமிருக்கிறதா இப்போது?
கொஞ்சம் நெருங்கிப்போனால் அந்த அற்புதத்தை படம் எடுக்கலாம்.
தூரம் அதிகமாக இருப்பதால் படமெடுக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்....
மனதில் பதியவைத்துக்கொள்ளலாம்.