எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.
அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.
அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!
அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...
கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக