மகான் சொன்ன சில ஆன்மீக சிந்தனைகள்:

அமைதிக்கு காந்திய வழி என்று பெயரே நிலைத்துவிட்டது. ஒரு சாதாரண மனிதன் தேசத்தின் தலைவனாக மாறிய வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். ஒரு முறை காந்தியடிகள் “நான் என் வாழ்க்கையையே மக்களுக்காக விட்டுச் செல்கின்றேன்” என்றார். அவரது சுயசரிதை மிகவும் உண்மையானது. அதை படித்தவர்களுக்கு அவரது பக்தியும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

மகான் சொன்ன சில ஆன்மீக சிந்தனைகள்:

அறிவையும் விட மேலானது

* பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.
* கீதையை வழிபாடு செய்வது என்பது கிளிப்பிள்ளை போல பாராயணம் செய்வது அல்ல. அதன் உபதேசப்படி நடப்பதே கீதையைப் பின்பற்றுவதாகும். கண்ணன் காட்டிய வழியில் நடப்பதற்கு வழிகாட்டியாக கீதையை படிக்க வேண்டும்.
* வழிபாடு உண்மையானதாக இருக்க வேண்டும். வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் வழிபாட்டில் லயிக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற பரிபூரணமான கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட வேண்டும்.
* சத்தியமே நான் கடைபிடிக்கும் மதம். அகிம்சையே அதற்கான வழி. அறிவையும் விட சத்தியம் மேலானதாகும். யார் ஒருவன் ஆணவமே இல்லாமல் பணிவின் இருப்பிடமாகத் திகழ்கிறானோ அவனே சத்தியத்தை காண்கின்ற பாக்கியத்தைப் பெறுவான்.
* உண்மையாக நடக்க விரும்புகிறவன் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒப்புக் கொள்ளவும், அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

மன்னிக்கும் மனம் வேண்டும்

* சேவை செய்வதற்காகவே கடவுள் நமக்கு இவ்வுடலைக் கொடுத்திருக்கிறார். உடல் சுகங்களை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள். இன்பவாழ்வில் ரகசியம் சேவை செய்வதில் தான் இருக்கிறது.
* தீமை செய்தவனையும் வெறுப்பது நல்ல குணமல்ல. தீமை செய்பவர்கள் மீது இரக்கம் காட்டுவது தான் சிறந்தது.
* நன்மை செய்தால் நன்மை செய்வது தான் உலகவழக்கம். தீமை செய்தாலும் நன்மையே செய்வேன் என்பது உத்தமர் வழக்கம். எங்கே மன்னிக்கும் குணம் இருக்கின்றதோ அங்கே இறைவனே விரும்பி இருப்பான்.
* எத்தனை துன்பங்கள் குறுக்கிட்டாலும் நம் மனம் தீமையைச் சிந்திக்காமல் நல்வழியில் நடப்பதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
* ஒரு துளி விஷம் பால் முழுவதையும் பாழ்படுத்துவதுபோல, கோபம் என்னும் கொடிய குணம் நம்மை அழித்துவிடும்.
* மனதிற்கும் கண்கள், காதுகள் உண்டு. எத்தனையோ விஷயங்களை மனம் பார்க்கவும், கேட்கவும் செய்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்துவதே தியானம் ஆகும்.

தூய்மை தரும் ராமநாமம்

* நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன். அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன். ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.
* ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று. அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
* இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
* எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
* ராமநாமத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும் தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
* உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.

கட்டுப்பாடு மனதில் வரவேண்டும்

* பிறர் உதவியை நம்பி இராமல் உங்கள் சொந்த பலத்தையே நம்பியிருக்க வேண்டும். ஆத்மபலம் இல்லாத வேறு எந்த பலமுமே அற்பமானது. பயனற்றது. எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலோ, ஆயுதபலத்தில் உயர்ந்திருந்தாலோ அதெல்லாம் உண்மையான பலமாகிவிடாது.
* கருணையே உருவானவர், அன்பு மயமானவர், நம் பிழைகளைப் பொறுப்பவர் என்றெல்லாம் கடவுளுக்கு இலக்கணம் சொல்லிவிட்டு அவர் பெயரால் வாயில்லாப் பிராணிகளைக் கொல்லுவது மன்னிக்க முடியாத பாவமாகும்.
* வீரமுள்ள மனிதன் தனக்கு எப்போது மரணம் வந்தாலும் வரவேற்பான். அதை நண்பனைப் போல் வரவேற்பான். அதற்காக யாரும் மரணத்தை அறைகூவி அழைக்க வேண்டியதில்லை.
* மனதைக் கட்டுப்படுத்தாமல் வெறும் உடலை மட்டும் கட்டுப்படுத்த முயல்வது முடியாத காரியமாகும். கட்டுப்பாடு மனதிலிருந்து உண்டானால் மட்டுமே பயனுடையதாக இருக்கும்.

தவறு செய்யாதவர் யாருமில்லை

* பகுத்தறிவு இல்லாதவர்களும், சுகபோகத்திற்காகவே வாழ்கின்றவர்களும் தங்கள் பிழைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.
* தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், தவறு என்று கண்டதும் இனிச் செய்வதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த உறுதியில் இருந்து விலகாமல் வெற்றி பெற்றுவிட்டால் நாம் முன்பு செய்த தவறுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடி விடும்.
* நான் தவறே செய்யாதவன் என்று யார் ஒருவனும் கூறிக் கொள்ள முடியாது. தவறு திருத்தத்திற்கு உரியது. திருத்தப்படும்போது பிழைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
* தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது. அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
* ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதோ அல்லது அதனைத் திருத்திக் கொள்ள முற்படுவதோ சரியானது தான். ஆனால், அதைக் காட்டிலும் எளிய காரியம் ஒன்று உண்டு. விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பதே சிறந்தது.
* நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.