வாழ்க்கை வேறு மாதிரி

எனக்குத் தெரிந்து 80 -களில் தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது....! * சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு, பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு, அக்கம், பக்கத்தவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். * குழந்தைகள் அனைவரும் ஓடி, ஆடி, விளையாடிக் கொண்டிருப்பார்கள். * தெருவில் வேக வாய்த்த கடலை, கருப்பு உளுந்து, பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். * மெல்ல பொழுது சாயும் நேரத்தில், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன், அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள். * வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட..! பாட்டிக்கள் மட்டும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள். * வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது..! * ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேளையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புவார்கள்...! மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடு நடுவே சொல்வார்கள்...! * இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS, AM ராஜா, P.சுசீலா, PB Srinivas, SPB...... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும்...! * வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது...! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. * அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்...! * அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம். * உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும். * வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்..! * அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம். * காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார். * நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றி சரி செய்வார்கள்...! * விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு...! * சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு...! * இன்றும், பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...! * பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள், நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன. பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம். * இதற்கு முன், கிராமபோன் இருந்தது. அதை சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள்...! இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும். * பிறகு, கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில், மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது. * பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும், கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்...! * ஆர்வ மிகுதியால், உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு...