வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது
சின்னதாய் உடல்சுட்டாலும்
பதறியடித்துப் பண்ணும் காரியங்கள்
ஆக்கினைதான் என்றாலும்
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது
உப்பும், மிளகாயும்
ஒன்றாய்ச் சேர்த்து
மூன்றுமுறை தலைசுற்றி
தூ,தூ எனத்துப்பி
அடுப்பினுள் போட்டு
அதுவெடிக்கையில்
கண்ணூறு கழிந்ததாய்
களிகொள்வாள்
வயிற்றுவலி வந்தால்
சாமிமுன்னின்று
மந்திரம் சொல்லி
வலிகொண்ட இடத்தில்
திருநீறு தடவி
ஆ.. காட்டச்சொல்லி
அதற்குள்ளும் தூவி
அடுத்தகணமே மாறுமென
ஆனந்தங்கொள்வாள்
இப்படிச்
சொல்லிக் கொண்டேபோகலாம்
சுகப்படுத்தும் வழிமுறைகளை
உயர் கல்விக்காய் நான்
ஊர்விட்டகலையில்
கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில்
உயிர் உருக்கும் அவள் நினைவுகள்