பசுமைப் புரட்சி குறித்த குரல் முன் எப்போதையும் விட தற்போது அதிகரித்திருக்கிறது. பசுமைப் புரட்சி என்பது நாட்டு மக்களுக்கு பெரும் பலன்களை அள்ளித் தரக்கூடியது என்பதைப் போன்ற ஒரு பதிவு அனைவரது பொதுப்புத்தியிலும் அழுத்தமாக உறைய வைக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் பசுமைப் புரட்சி ஒருபக்கம் இருக்கட்டும். இதற்கு முன் வந்து போன பசுமைப் புரட்சியின் போது நடந்தது என்ன? உணவுப் பஞ்சத்தை காரணமாகக் காட்டி, 60களில் பசுமைப்புரட்சித் திட்டம் இங்கே முன்வைக்கப் பட்டது. அதன் விளைவுதான் குறுகிய காலத்தில் மகசூல் அளிக்கும் குறுவை சாகுபடி அறிமுகமானது. இதற்கான வேதி உரங்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து, கொள்ளை லாபத்திற்கு விவசாயிகளிடம் விற்பனை செய்தன. அதனைச் சமாளிக்க அரசு விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தது. கடன் கொடுத்தது. ஆனாலும் என்ன, விவசாயி என்றால் அவன் கடனாளியாகி சாவதைத் தவிர வேறு வழியில்லை என்பது சாசுவதமான நிøலையானது. பணம், நாணயம் இவற்றை பல மாதங்கள் பார்க்காமலே வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. புளி நிறைய கிடைத்தால் அதனைக் கொடுத்து கிழங்குகளை வாங்கிக்கொள்வார்கள். அரிசியும், கேழ்வரகும் பண்டமாற்றுக்கான அடிப்படை ஆதாரப் பொருள்களாக இருந்தன. இப்படி விவசாயிகளின் வாழ்வில் பணம் என்பது எப்போதோ சில தவிர்க்க முடியாத தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம் இருந்தது. அப்போது கடன் இல்லை கவலை இல்லை, வங்கிகளும் இல்லை. அவை தொடர்பான வம்புகளும் இல்லை. பசுமைப் புரட்சி ஏறத்தாழ இவை எல்லாவற்றுக்குமே உலை வைத்துவிட்டது. விதை நெல் தொடங்கி, அதற்கு உரம் வாங்குகிற வரைக்கும் எல்லாவற்றுக்குமே விவசாயியின் கையில் பணம் வேண்டியதாக இருந்தது. அவன் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவான். கடன் வாங்கப் பழகினான். கடைசியின் மிஞ்சியது கடன்தான். பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலங்களில் வயலுக்குள் கொழுஞ்சி போன்ற செடிகளும், வரப்புகளில் உரத்துக்கான இலை, தழைகளைத் தரும் வளமான செடிகளையும் வளர்ப்பது வழக்கமாக இருந்தது. வயல் தரிசாக கிடக்கும் நாட்களில் புழுதி எடுப்பார்கள். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் உழவன் தனது கால் ஆழமாக அழுந்த தன் நிலத்தை உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும். இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம். நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை, தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுக்கின்றது என அறிகிறோம். அதன் பின்னர் ஆடி மாத மழையில் வயல் முழுவதும் கொழுஞ்சி செடி சில்லென்று முளைக்கும். நடவுப் பருவத்திற்குள் அந்த செடிகள் நன்றாகத் தழைந்துவிடும். நடவுக்கு தொழியடிக்கும் முன்னரே அந்த செடிகளை மடக்கி உழுது, மண்ணோடு சேர்ந்து மட்கட் செய்வார்கள். அடுத்து வயல் வரப்புகளில் உள்ள உயர்ந்த செடிகளில் உள்ள இலை, தழைகளையும் வெட்டி வயலுக்குள் பரப்புவார்கள். எல்லாம் சேர்ந்து மக்கி, மண்ணுக்கு உரமாகி, அதன் மணிச்சத்தை வளமாக்கும். நடவுக்கு முன்னர் தொழியோடு சேர்ந்து மட்கும் இந்த இயற்றை உரம் மண்ணின் உயிர்ச்சத்தோடு இரண்டறக் கலந்து பயிரை வளர்க்கப் பயன்படும். இப்படித்தான் நமது பாரம்பரிய விவசாயம் நடந்து வந்தது. உரம் ஒருபக்கம், பூச்சி மருந்து மற்றொரு பக்கம். உரம் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை உறிஞ்சி அதன் மூலம் பயிரை சூல் கொள்ள வைத்தது. பூச்சி மருந்து உழவுக்கும் உழவனுக்கும் நண்பனான சிற்றுயிர்களையும் சேர்த்துக் கொன்றது. இப்படி காலம் காலமாக நாம் கைப்பற்றி வந்த இயற்கை வழி வேளாண் முறைகள் அனைத்தையும் பறிகொடுத்தோம். நமது வாழ்க்கை முறையாக இருந்த இயற்கை விவசாயம், இப்போது வார்த்தை அளவில் கூட இல்லாமல் போய்விட்டது. |