தண்ணீரை மைக்ரோவேவ்அவணில் சூடாக்காதீர்கள்!!


தண்ணீரை மைக்ரோவேவ் அவணில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, மைக்ரோவேவ்அவண் எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண எலக்றிக்அவண்களில் வெப்பத்தை உண்டாக்க சூடாக்கிகள் இருக்கும். ஆனால், அப்படியொரு அமைப்பே இல்லாதபோது மைக்ரோவேவ்அவண்களில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது? இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது.
மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் மைக்ரோவேவ்அவண்இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக் கொண்ட பொருட்களை மட்டுமே மைக்ரோவேவ்அவண் மூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது. எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை மைக்ரோவேவ்அவணுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை மைக்ரோவேவ்அவணில் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்? சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து - மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது. இவ்வாறான நிகழ்வு மைக்ரோவேவ்அவணில் ஏற்படுவதில்லை. மைக்ரோவேவ்அவணினுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும்.

ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, உச்ச வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத் தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.எனவேதான், மைக்ரோவேவ்அவண்களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!