களவாணி பார்த்தே தீர வேண்டியபடம்

களவாணி படத்தை வீட்டு அம்மாவோடு பார்க்க வேண்டும் என்று இருந்தேன்... இருந்தாலும் படத்தை பற்றிய பேச்சு அதிகமாக இருந்த காரணத்தாலும்,விகடன் வேறு 46 மார்க் போட்டு அப்படி என்ன அந்த படத்தில் இருக்கின்றது என்று பார்க்க வைக்கும் ஆர்வம் காரணமாகவும் அந்த படத்தை நான் தனியாக பாத்து தொலைத்து விட்டேன்... படத்துக்கு அழைத்து போகின்றேன் என்று சொல்லிவிட்டு ...அழைத்து போகவில்லை என்றால்....தாகத்துக்கு தண்ணி கேட்டு அது அரைமணி நேரம் கழித்துதான் என் கம்யூட்டர் டேபிளில் லொட் என்று வைக்கபடும் என்று எனக்கு தெரியும்... இருந்தாலும் நான் உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இருக்கின்றன்...




சரி இந்த படத்தை நான் பாக்கவேண்டும் என்று நினைக்க வைத்த இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் டிரைலர்... கட்டிக்கறேன்னு சொல்லு என்று வண்டி துடைத்துக்கொண்டு இருக்கும் போது... அந்த சின்ன பெண்ணிடம் பேசுவதும்.. ஒரே சின்ன பிள்ளையா பார்த்து ஏமாத்தறான் என்ற சொல்லாடலும் என் கிராமத்து பேச்சாக இருந்தது... என் மக்களை எந்த பகட்டும் இல்லாமல் திரையில் பார்த்தது போன்ற உணர்வு அது...
உங்களுக்கு இந்த திரைபடத்தை பற்றிய கதை உங்களுக்கு இந்நேரம் தெரிந்து இருக்கும் அல்லது படித்து இருப்பீர்கள்...

உண்மையான காதலன் என்பவன் யார் தெரியுமா? தான் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த நேரத்திலும் பிரச்சனையோ அல்லது அவமானமோ எற்படுத்தாதவன்தான் உண்மையான காதலன்...

அந்த பெண் குடும்பசூழ்நிலையில் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாலும்.. தான் காதலித்த பெண் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான காதலன்...

ஆனால் இப்போது பல காதலன்கள் அப்படி இல்லை காதலின் போர்வையில் ஒரு பெண்ணை மயக்கி அந்த பெண்ணை கிரக வைத்து... நம்பிக்கை மொழி பேசி அந்த பெண்ணின் நிர்வாணத்தை கேமரா செல்போனில் பதிவு செய்து.. அதை நண்பர்களுக்கு விருந்தாக்கி...பிறகு அந்த பெண்ணை மிரட்டி விருப்பபட்ட நண்பர்களுக்கு அந்த வீடியோவை காட்டி விருந்து வைத்து...இப்போது கூட ஜுனியர் விகடனில் அண்ணன் தம்பி இருவரும் ஒரு கல்லூரி பெண்ணை ஏமாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...

இதுவா காதல்...காதலிக்கு எந்த சிறு அவச்சொல்லும் ஏற்படாமல் பாதுகாப்பவனே உண்மையான காதலன்.... அந்த வகையில் இந்த களவாணி கிரேட்....
ஒரு சின்ன சீன்... சொல்லறேன்...
களவாணி விமல்... தெரிந்து அல்லது தெரியாமல் செய்த களவாணித்தனம் அவன் காதலி மகேஷ்வரிக்கு தெரிந்து விடுகின்றது... அதனால் அவனை பார்பபதை தவிர்க்கின்றாள்... அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க அவளை சந்திக்க ஒரு திட்டம் போட்டு....

அவளோடு படிக்கும் பெண் வயதுக்கு வந்து விட்டதாகவும் சடங்கு சுத்த போவதாகவும் ஒரு பத்திரிக்கை அடித்து அவள் வீட்டில் கொடுக்க வைக்கின்றான் களவாணி விமல்...
இதை உண்மை என்று நம்பி மகேஸ்வரி வீட்டை விட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சைக்கிளில் வர நடுவில் அவளை மீட் பண்ணி மன்னிப்பு கேட்பது களவாணி விமலின் பிளான்....
களவாணி தன் காதலியை பார்க்கின்றான்.... அவளிடன் தன் தரப்பு நியாத்தை சொல்கின்றான்... அவள் ஏற்றுக்கொள்ளவில்லை... உன்னிடம் இனி நான் பேச போவதில்லை என்று சொல்கின்றாள்...
தன் தங்கை பொய் பத்திரிக்கை காட்டி விட்டை விட்டு போனது தெரிந்து போய் தங்கையை கையும் களவுமாக பிடிக்க முரட்டு அண்ணன் தன் பல்சரில் விரைகின்றான்...
களவாணி தன் காதலியிடம் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவள் கோபித்து கொண்டு நடக்க... துரத்தில் அவள் அண்ணன் பல்சரில் வருவதை பார்த்துவிட்டு... காதலியின் அண்ணன் அவனுக்கு தெரிய கூடாது என்பதற்காக பக்கத்தில் கடக்க போகும் மினிபஸ்சில் காதலியை குண்டு கட்டாக தூக்கி ஏற்றி விட்டு, அதே பஸ்சில் ஏறி ஒரு கையால் தன் காதலி வந்த சைக்கிளை பிடித்த்துகொண்டு போக... காதலியின் அண்ணன் அந்த இடத்தை கிராஸ் செய்ததும்...அதுவரை முரண்டு பிடித்த காதலி தன் அண்ணனிடம் இருந்து தன் காதலன் காப்பாற்றியது தெரிந்ததும் அமைதியாவதும் ... அதன் பிறகு எதுவும் பேசாமல் பேருந்து விட்டு இறங்கி களவாணி விமல் நடப்பது கவிதை....

இதை கையினால் பேப்பரில்.... இந்த காட்சியை எழுதிடலாம்... ஆனால் நம்புவது போல் அந்த காட்சியை எடுத்து இருப்பதுதான் சினிமா...அந்த காட்சிக்கு நிச்சயம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்...

தன் பெயரையும் தன் காதலி பெயரையும் ஊர் முழுவதும் எழுதி வைத்திருக்க.... அதனை களவாணி நண்பன் கோபத்தில் இருவர் பெயரையும் எல்லோருக்கு தெரிவது போல் எழுதி விட்டு வந்து மோட்டர் கொட்டகையில், தன் காதலி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று உட்கார்ந்து இருக்கும் களவாணி விமலிடம் பெருமையோடு அதை சொல்லும் போது...
கயிற்று கட்டிலில் இருந்து கோபத்தோடு வேட்டி நழுவுவது தெரியாமல் தன் நண்பனை அடித்துவிட்டு.... அந்த பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா? அந்த பொண்ணுக்கு எவ்வளவு அசிக்கம்ன்னு கோபப்படறான் பாருங்க.. அதுதான் காதல் அதுதான்படம்....

இந்த படத்தின் சிறப்பே எல்லா வயதினரும் அந்த அந்த கேரக்டர்களை படத்தில் காணலாம்...அவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கின்றார்கள்...
களவாணி படத்தின் கதை இதுதான்....

களவாணி தனம் செய்யும் அறிவழகன்(விமல்).. பக்கத்து ஊரில் அடிதடி விஷயத்தில் கொடி கட்டி பறக்கும் ஒருவனின் தங்கையை மகேஸ்வரி (ஓவியா) காதலிக்கின்றான்...அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான்... கதை..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
1328 முறையாக இந்த கதைகளம் தமிழ் சினிமாவுக்கு இது பழசு...ஆனால் அதனை சுவைபட சொல்லி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

இரண்டாவது வில்லனுக்கு பழைய ஆட்களை தேடாமல் ரொம்ப இயல்பாய் ஒரு பையனை பிடித்து போட்டு இருப்பது இயக்குனரின் திறமைக்கு அவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்..

விமல் வெற்றிக்கு முக்கியகாரணம் அந்த அலட்சியமான டயலாகடெலிவரிதான்.... சும்மாவே ஆடுவேன்... காலில் சலங்கை வேற கட்டிவிட்டா ஆட்டத்துக்கு கேக்கவா வேனும் என்று சொல்லும் அந்த டயலாக் அற்புதம்....

சின்ன சின்ன விஷயங்களில் கவனித்து அறுவடை செய்து இருக்கின்றார்கள்...

உதாரணத்துக்கு டுடோரியலில் வாத்தியார் சிகரேட் கேட்க... பாக்கெட் புல்லாக வைத்துக்கொண்டு ஒண்ணு தான் இருக்கு சார் என்று சொல்லி விட்டு முழு பாக்கெட்டையும் வீசிவிட்டு... அதன் பிறகு அதை எடுப்பது என்று நிறைய விஷயம் புதிதாய் சொல்லி இருக்கின்றார்கள்...
இளவரசு மற்றும் சரண்யா வாழ்ந்து இருக்கின்றார்கள்... எங்க அப்பன் ஆத்தாளை திரையில் பார்பது போல இருக்கு...அதுதான் அந்த இருவரின் வெற்றி
ஊரில் வம்பு பேசுவது அப்படியே டிஷ் வழியா எல்லாருக்கும் போவது போலான அந்த காட்சி அற்புதம்....
விமலோட தங்கச்சி கேரக்டர்... அதுக்காவே டைரக்டரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...ரொம்ப இய்ல்பாக அந்த பெண்ணை நடிக்க வைத்து இருக்கின்றர்கள்...அதே போல் கதாநாயகியின் அப்பாவின் கிராமத்து வாசம் அந்த பேச்சிலும் முகத்திலும்... அற்புதமான தேர்வு
படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்துக்கு பெரிய பலம்...ஊர் திருவிழா,டாஸ்மார்க் இன்டோர் மற்றும் நைட் சீன் எல்லாவற்றிலும் உழைப்பு தெரிகின்றது...
டாப் ஆங்கிளில் வயல்களையும் அதில் கருப்பு ரிப்பன் போலான தார் சாலைகளையும் அப்படியே அழகாய் அள்ளி எடுத்து வந்து இருக்கின்றார்கள்...
துரத்தல் காட்சிகளில் எந்த கன்பியசனும் பார்வையாளனுக்கு இல்லை...
அதே போல் ஒரு பாடல்காட்சியில் கோவில் மேல் நடப்பது போலான அந்த காட்சி நல்ல விஷுவல் டேஸ்ட்.. அதே போல் நண்டு வளைக்குள் கேமரா இருப்பது போலான காட்சிகள் என்று நிறைய மெனகெட்டு இருக்கின்றார்கள்...
பிகல் கிராமம் என்றால் இதுதான்.. யமாஹா வைத்து இருக்கின்றார்கள்... டிஷ் வைத்து இருக்கின்றார்கள்...பல்சர் இருக்கின்றது...கோவில் திருவிழாவில் ரீட்டா நடனம் இருக்கின்றது... செல்போன் இருக்கின்றது... பெரியப்பா என்பவர் பேச்சுக்கும், சித்தப்பன் பேச்சுக்கும் சட்டென கட்டுபடுவது...இரட்டை சடையோடு யூனிபார்மில் பள்ளிக்கு போகும் கிராமத்து பெண் பிள்ளைகள்...நைட்டு தற்கொலை செய்து கொள்ளுவாள் என தாவணியை தன் புடைவையோடு படு முடிச்சி போட்டுக்கொண்டு படுப்பது, தண்ணி அடிக்க அலையும் இளைஞர்கள், என டிபிகல் கிராமத்தை கண் முன் நிறுத்துகின்றார் இயக்குனர் சற்குணம்....

வேலை வெட்டி இல்லாத தன் பையனுக்கு காதலால்தான் பயிரை பாதுகாத்தான் என தெரிந்து சட்டென கொதிக்கும் இளவரசுக்கு இந்த படம் அவர் கேரியரில் குறித்து வைத்துகொள்ளகூடிய ஒன்று...
பாடல்களில் டம்ம டும்மா சாங்.. ஒரு நல்லசாங்....
பள்ளி சிருடையில் ஒரு மாதிரி இருக்கும் ஓவியா... மாண்டேஜ் ஷாட்டுகளில் முக்கியமாக விமல் நண்பர்களோடு டீ குடிக்கு அந்த காட்சிகளில் ரொம்ப மெச்சூரிட்டியாக அழகாக தெரிகின்றார்....

ரீட்டா ஆடல் பாடல் காட்சிகளில் கூட தொப்புள் காட்டபடவில்லை... இரத்தம் தொப்புள் என காட்சிகள் வைக்க நிறைய சான்ஸ இருந்தும் ரொம்ப டீசன்டாக படத்தை கொடுத்து இருக்கின்றார் இயக்குனர்...

படம் முடிந்து யாரும் எழுந்து போகாமல் நின்று இளவரசு சரண்யா லுட்டியை பார்த்து விட்டு போவது படத்தின் வெற்றி....
தியேட்டர் டிஸ்க்கி....

தியேட்டரில்தான் டிக்கெட் கிடைத்து...நிறைய காதலர்கள் நிழலுக்கு ஒதுங்க படத்துக்கு வந்து இருந்தார்கள்...
தியேட்டரில் யாராவது நின்னாலே ஸ்கிரின் மறைத்தது....
என் ரோவில் கடைசி சீட்டுக்கு போகும் காதலர்களில் காதலி இருட்டில் தடுக்கி என் மடியில் விழுவது போல் உட்கார்ந்து சட்டென தாங்கி பிடித்து கடைசி சீட்டுக்கு அனுப்பி வைக்க இன்டர்வெல்லில் அந்த பெண் என்னை பார்த்தும் வெட்கத்தில் குனிந்து கொண்டது...
நடு சீட் நம்பர் டிக்கெட் எடுத்து விட்டு ஒரு ஜோடி ஓர சீட்டில் உட்கார பெருமுயற்சி எடுக்க.... ஒழிந்து போங்கள் என தியேட்டர் சிப்பந்தி விட்டார்...
தியேட்டர் முழுவதும் படத்தை உற்சாகமாக பார்த்தார்கள்.... என்ன யாராவது நடந்து போனால் திரை தெரிய மறுக்கின்றது....
================
நீங்க வேன பாருங்க ஆனி போய் ஆவடி முடிஞ்சிதுன்னா அவன் டாப்பா வருவான் என்று சொல்லும் சரண்யா... அப்போது கொஞ்சமும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்... இந்த படமும் டாப்பாக ரசிக்கபடும் என்று...