இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
ஹிட்லர்
ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது. வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்) இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.
தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளி
யூர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.
இதை அறிந்த ஆசிரியர், அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை. 1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.
அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார்.
1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.
"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார். ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித்தலைவரானார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார். அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல். 1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.
தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச்சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப்புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப்பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப்பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக்கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.
ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.
வெற்றிப்பாதையில் ஹிட்லர்
போலந்தை பிடித்துக் கொண்ட ஜெர்மனியுடன் போர் தொடுக்க இங்கிலாந்தும், பிரான்சும் முடிவு செய்து அதற்கான போர் பிரகடனத்தை 1939 செப்டம்பர் 6-ந்தேதி வெளியிட்டன. "போலந்தை விட்டு ஜெர்மனி ராணுவம் உடனே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்தன. இதை ஹிட்லர் பொருட்படுத்தவில்லை. இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்கும்படி தன் படைகளுக்கு கட்டளையிட்டார். அந்த நிமிடம் வரை இது உலக யுத்தமாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஹிட்லர் தன் தளபதிகளிடம் பேசும்போது "இந்த யுத்தம் ஐரோப்பாவுடன் நின்று விடும். முதல் உலகப் போரைப் போல, உலகம் முழுவதும் பரவாது" என்று கூறியிருந்தார். ஆனால் இங்கிலாந்தும், பிரான்சும் போரில் குதித்ததும் அது உலக யுத்தமாக மாறியது.
ஹிட்லர்
ஹிட்லரின் கட்டளைப்படி இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்க ஜெர்மனியின் முப்படைகளும் துரிதமாக செயல்பட்டன. அக்டோபர் 14-ந்தேதிஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுக்காவலையும் மீறி, இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலை (பெயர்: "ராயல் ஓக்") தாக்கி மூழ்கடித்தது. இதனால் கப்பலில் இருந்த 800 மாலுமிகள் பலியானார்கள்.
இது இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இங்கிலாந்துக்கு சேதம் உண்டாக்கிவிட்ட மகிழ்ச்சியில் பின்லாந்து மீது படையெடுத்தார் ஹிட்லர். ஆரம்பத்தில் பின்லாந்து படைகள் எதிர்த்துப் போரிட்டபோதிலும் பிறகு சரண் அடைந்தன. பின்னர் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி வெகு விரைவில் அந்த இரு நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டார் ஹிட்லர். பின்னர் சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றையும் தாக்கி வெற்றி பெற்றார்.
1940 மே 10-ந்தேதி, பிரான்ஸ் நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார். பிரிட்டன் படைகள் பிரான்சுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டன. என்றாலும் ஜெர்மனியின் டாங்கி படைக்கும், விமானப் படைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பிரிட்டிஷ், பிரெஞ்சு படைகள் திணறின.
பிரான்ஸ் ராணுவத்தில் 51 லட்சம் வீரர்களும், பிரான்சுக்கு ஆதரவாக 7 லட்சம் பிரிட்டிஷ் ராணுவத்தினரும் இருந்த போதிலும் பயனில்லை. ஜெர்மனியின் 4 ஆயிரம் விமானங்கள், பிரான்ஸ் மீது குண்டு மாரி பொழிந்தன. அதே சமயத்தில் ஜெர்மனியின் தரைப்படைகளும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரை நோக்கி முன்னேறின.
மே 27-ந்தேதி டன்கிர்க் துறைமுகத்தில் இங்கிலாந்து மற்றும் நேசப்படைகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க ஜெர்மனி முயற்சி செய்தது. எனினும் சர்ச்சிலின் விïகத்தால் அவர்களில் பெரும்பான்மையோர் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் சுமார் 40 ஆயிரம் பேர் ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1940 ஜுன் மாத மத்தியில் பாரீஸ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. போரில் பிரான்ஸ் வீரர்கள் 5 லட்சம் பேர் மாண்டார்கள். 10 லட்சம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். "உடனே சரண் அடையாவிட்டால் பாரீஸ் நகரத்தை எரித்துச் சாம்பலாக்குவேன்" என்று கொக்கரித்தார் ஹிட்லர். இதன் காரணமாக, 1940 ஜுன் 14-ந்தேதி ஜெர்மனியிடம் பிரான்ஸ் சரண் அடைந்தது. ஹிட்லர் நேரடியாக பாரீஸ் நகருக்குச் சென்று சரணாகதிப் பத்திரத்தில் பிரெஞ்சு பிரதமரிடமும், ராணுவத் தளபதியிடமும் கையெழுத்து வாங்கினார்.
பிரான்சை கைப்பற்றிக் கொண்ட ஹிட்லர் அடுத்தபடியாக பிரிட்டன் மீது குறிவைத்தார். போர் ஆரம்பமானபோது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் சேம்பர்லைன். அவர் ஜெர்மனியை "தாஜா" செய்து சமாதானமாகப் போய்விடலாம் என்று நினைத்தார். அதன் விளைவாக போர் நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை. பிரிட்டனை ஹிட்லர் தாக்கியபோது அதை இங்கிலாந்து ராணுவம் சமாளிக்க முடியவில்லை.
இதனால் பிரதமர் சேம்பர்லைன் மீது இங்கிலாந்து மக்கள் சீற்றம் கொண்டனர். பதவியை விட்டு விலகும்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் பதவியை சேம்பர் லைன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சர்ச்சில் பிரதமரானார். இங்கிலாந்துக்கு ஹிட்லர் "இறுதி எச்சரிக்கை" விடுத்தார். "நீங்களாக சரண் அடைந்து விடுங்கள். இல்லா விட்டால்பிரிட்டனை தரைமட்டம் ஆக்கிவிடுவேன்" என்று கொக்கரித்தார்.
சர்ச்சில் மிகப்பெரிய ராஜதந்திரி. போர்ப்பயிற்சி பெற்றவர். இரும்பு போல உறுதியானவர். அவர் சுருட்டைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே சொன்னார்: "சரண் அடையும்படி யாரைப்பார்த்து சொல்கிறாய்? உன் மிரட்டலுக்கு எல்லாம் இங்கிலாந்து மக்கள் பயந்து விடமாட்டார்கள். உன்னால் முடிந்ததைச் செய்!" சர்ச்சில் இவ்வாறு கூறியதைக்கேட்டு அடங்காத கோபம் கொண்டார், ஹிட்லர்.
1940 ஜுலை 10-ந்தேதி தனது விமானப்படையைப் பிரிட்டன் மீது ஏவிவிட்டார். ஜெர்மன் போர் விமானங்கள், அணி அணியாகப் பறந்து சென்று பிரிட்டன் மீது குண்டுமாரி பொழிந்தன. ஜுலை 28-ந்தேதிக்குள் 7,500 தடவை விமானத்தாக்குதல் நடந்தது. லண்டன் மாநகரத்தின் மீதும் குண்டு வீச்சு நடந்தது. இதில், ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இங்கிலாந்து அரண்மனை ("பக்கிங்காம் பாலஸ்"), பாராளுமன்ற கட்டிடம் ஆகியவையும் விமானத்தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை. அவை பலத்த சேதம் அடைந்தன. பிரிட்டிஷ் விமானப்படை எதிர்த்தாக்குதல் நடத்தியது. 575 ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பிரிட்டன் இழந்தது 100 விமானங்கள் மட்டுமே. நவம்பர் 14-ந்தேதி லண்டன் மீது மிகப்பெரிய தாக்குதலை ஜெர்மனி நடத்தியது. 500 போர் விமானங்கள் லண்டன் மீது பறந்து குண்டுமாரி பொழிந்தன. இதனால், புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்பட சுமார் 60 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 586 பேர் பலியானார்கள்.
ஜெர்மனி விமானங்கள் வரிசை வரிசையாக வந்து சரமாரியாக குண்டு வீசியபோது, "நெருப்பு மழை" பெய்தது போல இருந்ததாக அந்த சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் கூறினார்கள். ஜெர்மனி இவ்வாறு இடைவிடாமல் தாக்குதல் நடத்தியபோதும், இங்கிலாந்து மக்கள் மனம் தளர்ந்து விடவில்லை. மலைபோல் நிமிர்ந்து நின்றார்கள்.
பிரதமர் சர்ச்சில் பின்னால் மக்கள் ஓரணியில் நின்று அவர் கரத்தை பலப்படுத்தினார்கள். பிரிட்டனை சுலபமாக சரண் அடையச் செய்ய முடியும் என்று நினைத்த ஹிட்லர் ஏமாற்றம் அடைந்தார்.
அவருக்கு கோபம் அதிகமாகியது. இங்கிலாந்து மீது விமானத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, ரஷியா மீது தன் பார்வையைத் திருப்பினார்.
"ரஷியாவைப் பிடித்துவிட்டால் பிரிட்டன் தானாகப் பணிந்து விடும்" என்று நினைத்தார்.
ரஷ்யா நடத்திய வீரப்போர்
முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷியா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22-ந்தேதி ரஷியா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷியா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும்.
ரஷியாவுக்கு ஹிட்லரால் பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்த முடிந்ததே தவிர, வெற்றி பெறமுடியவில்லை.
"இரும்பு மனிதர்" ஸ்டாலின் தலைமையில் ரஷிய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர். அது போரின் போக்கையே மாற்றியது. உலகின் பல்வேறு நாடுகளிலும் போர் பரவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெர்மனிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான போர் 1941 ஜுன் மாதம் தொடங்கி, 1943 ஜனவரி வரை நடந்தது. 1941 ஜுன் 22-ந்தேதி அதிகாலை நேரம். ஜெர்மனி விமானங்கள் சாரி சாரியாகப் பறந்து ரஷிய நகரங்கள் மீது குண்டு வீசின. அதே சமயம், 1,000 மைல் நீள எல்லையைத் தாண்டி, ரஷியாவுக்குள் ஜெர்மனி ராணுவம் புகுந்தது. என்றைக்காவது ஒருநாள் ரஷியா மீது ஜெர்மனி படையெடுக்கக்கூடும் என்று ஸ்டாலின் ஏற்கனவே எதிர் பார்த்தார்.
ரகசிய ஒற்றர்கள் மூலம் அவருக்கு இது பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இவ்வளவு பெரிய அளவில் ஹிட்லர் தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் ஜெர்மனியைவிட ரஷியாவின் கையே ஓங்கியிருந்தது. எனினும் ரஷிய விமானங்கள் மிகப்பழையவை. ஆயுதங்களும் பெரும்பாலும் உபயோக மற்றவை.
எனவே நவீன விமானங்களைக் கொண்டு ஜெர்மனி நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், ரஷியா திணற வேண்டியிருந்தது. ரஷியாவின் போக்குவரத்து பாதைகளை ஜெர்மனி ராணுவம் துண்டித்துவிட்டு முன்னேறியது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் ரஷியா இழந்த விமானங்கள் எண்ணிக்கை சுமார் 5,000. நாள் ஒன்றுக்கு 50 மைல் வீதம் ஜெர்மனி படைகள் முன்னேறிக்கொண்டிருந்தன.
ரஷியா பதிலடி கொடுத்த போதிலும், போரில் ரஷிய வீரர்கள் ஏராளமாக பலியாகிக் கொண்டிருந்தனர். 1941 செப்டம்பர் 8-ந்தேதி ரஷியாவின் முக்கிய நகரமான லெனின்கிராடை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. ஜெர்மனியின் மற்றொரு படை, மாஸ்கோவுக்கு 250 மைல் தூரத்தில் இருந்தது. ஏறத்தாழ, ரஷியாவின் பாதிப் பகுதியை ஹிட்லரின் படைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டன. எனினும் ரஷிய எல்லை 1,000 மைல் களுக்கு மேலாக விரிந்து பரந்து இருந்த காரணத்தால், கைப்பற்றிய பகுதிகளில் ஜெர்மனி படைகள் வேரூன்ற முடியவில்லை. ரஷியப் புரட்சி நாளான நவம்பர் 7-ந்தேதிக்குள் மாஸ்கோவை கைப்பற்றி விட வேண்டும் என்பது ஹிட்லரின் திட்டம். அக்டோபர் 14-ந்தேதி மாஸ்கோவை ஜெர்மனி படைகள் நெருங்கி விட்டன.
இன்னும் 50 மைல் தூரம்தான் பாக்கி. விரைவில் மாஸ்கோ வீழ்ந்து விடும் என்றே எல்லோரும் நினைத்தனர். மாஸ்கோவில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். நகரமே காலியாகிக் கொண்டிருந்தது. ஊரை விட்டு பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு மந்திரிகளுக்கு ஸ்டாலின் கட்டளையிட்டார். ஆனால் அவர் மட்டும் ஊரை விட்டு வெளியேறாமல், தன் மாளிகையிலேயே தங்கியிருந்தார்!
இந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு இயற்கை கை கொடுத்தது. ரஷியாவில் அது மழை காலம். கடும் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினார்கள். கடும் குளிர் வேறு. உணவு இல்லை; மாற்று உடை இல்லை. ஆயிரக்கணக்கான ஜெர்மனி வீரர்கள், குளிர் தாங்க முடியாமல் பிணமானார்கள். பட்டினியால் செத்தவர்கள் ஏராளம். தொற்று நோயினால் கணக்கற்றவர்கள் மடிந்தனர்.
மழையில் நனைந்துபோன துப்பாக்கி குண்டுகள், வெடிக்காமல் சதி செய்தன. ரஷிய வீரர்கள், கடும் குளிரை தாங்கி பழக்கப்பட்டவர்கள். எனவே, "இதுதான் சமயம்" என்று ஜெர்மனி படையை விரட்டி விரட்டி தாக்கினார்கள். மாஸ்கோவுக்கு 20 மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மனி படையினர், "உயிர் தப்பினால் போதும்" என்று, பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ரஷிய வீரர்கள் ஓடஓட விரட்டினார்கள்.
போரில் அமெரிக்கா
அமெரிக்க வசம் இருந்த "பெர்ல் ஹார்பர்" மீது ஜப்பான் நடத்தியவிமானத் தாக்குதல் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. அன்றுதான், உலகப் போரில் எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டு, வரலாறே மாறியது. அதுவரை உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளாமல், மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள "பெர்ல்" துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத்தாக்குதலில் அழிந்தன. 3 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காபோரில் குதித்தது.
பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு
ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ரஷியா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஓரணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின.
இதனால் யுத்தம் தீவிரம் அடைந்தது. 1942 பிப்ரவரி 15-ந்தேதி பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது. அங்கிருந்த இங்கிலாந்து ராணுவம், ஜப்பானிய ராணுவத்திடம் சரண் அடைந்தது. "சூரியன் அஸ்தமிக்காக ராஜ்ஜியம்" என்று புகழ் பெற்றிருந்த இங்கிலாந்து, சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரண் அடைய நேரிட்டது.
சிங்கப்பூருக்கும், மலாயாவுக்கும் இடையே உள்ள கடலின் நீளம் ஒரு மைல்தான். சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களில் பலர், கடலில் நீந்தி, மலாயாவுக்குத் தப்பிச் சென்றனர். 54 நாள் நடந்த கடும் போருக்குப்பின் மலாயாவையும் ஜப்பான் கைப்பற்றியது. அங்கு இங்கிலாந்து தரப்பில் 25,000 பேர் மாண்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிந்தன. ஜப்பானுக்கு ஏற்பட்ட உயிர் சேதம் 5 ஆயிரம் மட்டுமே. ஜப்பான் படைகள் பர்மாவையும் (தற்போதைய மியான்மீர்) தாக்கின. பர்மா தலைநகருக்கு 40 மைல் தூரத்தில் உள்ள பெகு என்ற நகரம், ஜப்பானியர் வசம் ஆகியது. பர்மாவில் இருந்த இங்கிலாந்து ராணுவத்தினர், திறமையானவர்கள் அல்ல. எனவே, அவர்களை ஜப்பானியர் எளிதாக முறியடிக்க முடிந்தது.
தற்போதைய இந்தோனேஷியா அக்காலத்தில் "டச்சு கிழக்கிந்திய தீவுகள்" என்று அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. டச்சு போர்னியோவில் பெட்ரோல் கிணறுகள் இருந்தன. எனவே, அந்த நாட்டையும் கைப்பற்ற ஜப்பான் முடிவு செய்தது. ஜப்பான் பாரசூட் படையினர், போர்னியோவுக்குள் குதித்து, அந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்தியத் தீவுகளிலும், போர்னியோவிலும் இருந்த டச்சு படையினர் சரண் அடைந்தனர். இந்த நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேர்களை, ஜப்பான் ராணுவத்தினர் "போர்க்கைதி களாக" கைது செய்தனர்.
1942 ஏப்ரல் 1-ந்தேதி, இலங்கை மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. பெர்ல் துறைமுகத்தை தாக்கிய ஜப்பான் கடற்படை தளபதி அட்மிரல் நாகுமோ தலைமையில் இந்த தாக்குதல் நடந்தன. ஜப்பான் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட இங்கிலாந்து, முன் எச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
கொழும்பிலும், முக்கிய கடற்படை தளமான திரிகோண மலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களை, பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவிட்டது. கொழும்பு மீது பறந்த ஜப்பான் போர் விமானம், அங்கு தாக்குதல் நடத்த எதுவுமே இல்லாததால், குண்டு வீசாமல் திரும்பியது. அப்போது, கடலில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதன் மீது குண்டு வீசி அதை மூழ்கடித்துவிட்டு, ஜப்பான் விமானம் திரும்பிச் சென்றது. இலங்கை தீவாக இருந்ததால், ஜப்பான் தனது தரைப் படையை அங்கு அனுப்ப இயலவில்லை.
இந்திய எல்லையில் ஜப்பான்
உலகப்போரில், இங்கிலாந்து படையில் இந்தியர்கள் பங்கு கொண்டார்கள். போர் முனையில் வீர தீரச் செயல் களில் ஈடுபட்டார்கள். இந்தியா மீது ஹிட்லருக்கு ஒரு கண் இருந்தது. இந்திய மக்கள் இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தி வந்தனர். உலகப் போரின் போதும், இந்தப் போராட்டம் நீடித்த ஜெர்மனியை அடக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் மூவரும்சந்தித்துப் பேசினர்.
இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.
அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.
பர்மாவைக் கைப்பற்றிக் கொண்ட ஜப்பான் ராணுவம், 1944 மார்ச் மாதத்தில் இந்தியாவை நோக்கித் திரும்பியது. மார்ச் 30-ந்தேதி இம்பால் நகரத்தை முற்றுகையிட்டது. (இம்பால் நகரம் இப்போது மணிபுரி மாநிலத்தில் உள்ளது). இம்பாலில் இருந்த இங்கிலாந்து படையில் இந்தியர்களும் இருந்தார்கள். அவர்கள் ஜப்பானியரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர்.
இதனால் இம்பால் நகருக்குள் ஜப்பான் படை
நுழைய முடியவில்லை. ஆனாலும், எப்படியாவது இம்பாலைப் பிடித்துவிட்டு, இந்தியாவுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற உறுதியுடன் ஜப்பானியர் 2 மாத காலம் முற்றுகையிட்டனர். இந்த சமயத்தில், இம்பாலுக்குள் சிக்கியிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள், மருந்துகள் முதலியவற்றை பிரிட்டிஷ் விமானங்கள் கொண்டு வந்து போட்டன.
ஆனால் முற்றுகையிட்டிருந்த ஜப்பானிய படைகளுக்கு உணவுப் பொருள்களோ, மருந்துகளோ கிடைக்காததோடு, வெடி பொருட்களும் தீர்ந்துபோய் விட்டன. இதன் காரணமாக, ஜப்பான் படைகள் தோல்வியைத் தழுவின. இம்பாலை தாக்கிய ஜப்பான் வீரர்கள் எண்ணிக்கை 85 ஆயிரம். அவர்களில் பெரும்பான்மையோர் போரில் பலியாகிவிட, மீதிப்பேர் பின்வாங்கிச் சென்றார்கள்.
ஏற்கனவே மாஸ்கோவை கைப்பற்ற முயன்று, ரஷியாவிடம் மூக்கறுபட்ட ஹிட்லர், ரஷியாவை எப்படியாவது அடிபணியச்செய்ய எண்ணி, ஸ்டாலின் கிராட் நகரைத் தாக்குமாறு தன் படைகளுக்குக் கட்டளையிட்டார். 1942 ஜுலை மாதத்தில், ரஷியாவில் உள்ள ஸ்டாலின் கிராட் நகரத்தை ஜெர்மனி படைகள் சூழ்ந்து கொண்டன. ஆனால், ரஷிய மக்கள் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். சுலபமாக ஸ்டாலின் கிராடை கைப்பற்றி விடலாம் என்று ஜெர்மன் படைகள் நினைத்தது பகல் கனவு ஆயிற்று. அவர்களுக்கு உணவுப்பொருள்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை. இதனால் ஜெர்மனி வீரர்கள், ஒரு விநாடிக்கு 7 பேர் செத்து விழுந்ததாக மதிப்பிடப்படுகிறது.
1943 ஜனவரி 31-ந்தேதி ஹிட்லர், "எக்காரணம் கொண்டும் ஜெர்மனி தளபதியாக இருப்பவர் சரண் அடையக்கூடாது. அதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்" என்று, ஸ்டாலின் கிராடில் இருந்த பீல்டுமார்ஷல் வான் பவ்லஸ் என்பவருக்கு தகவல் அனுப்பினார். ஆனால், தளபதி பவுலஸ் சுமார் 1,00,000 ஜெர்மனி ராணுவத்தினருடன் சரண் அடைந்தார்.
ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு 1943 நவம்பர் 26-ந்தேதி, பாரசீக நாட்டில் டெஹ்ரான் நகரில் நடந்தது. உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த ஹிட்லரை முறியடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.
ரஷியாவைப் பிடித்து விடலாம் என்று நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஆப்பிரிக்காவை கைப்பற்ற நினைத்த ஹிட்லரின் நண்பரான இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காகச் சென்ற ஜெர்மனி ராணுவத்தினர் 2 லட்சம் பேர் சரண் அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றியிருந்த ரஷிய பகுதிகளை மீட்க, ரஷியப் படைகள் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தின. அதில் ஒரு லட்சம் ஜெர்மனி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.
ஹிட்லரை கொல்ல முயற்சி
ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க்.
1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். "அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
ஹிட்லர் தோல்விப்பாதையில் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் ஜப்பானும் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது. உலகப்போர் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் திடீர் என்று மரணம் அடைந்தார். நியூயார்க் நகரில் 1882 ஜனவரி 30-ந்தேதி பிறந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய தந்தை பெரிய பணக்காரர். உயர் கல்வி பயின்றபின், சட்டம் பயின்று வக்கீல் ஆனார். அப்போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்க மேலவை உறுப்பினரானார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் அவரை கடற்படை உயர் அதிகாரியாக நியமித்தார்.
குண்டு வெடிப்புக்கு காரணமான அதிகாரி மீது விசாரணை 23-வது வயதில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் எவியனார். தனது 39 வயதில் ரூஸ்வெல்ட் ஒருநாள் மாலை குளிர்ந்த நீரில் குளித்தார். படுக்கைக்கு சென்றபோது, அவருடைய கால்கள் மரத்துப் போய்விட்டதை உணர்ந்தார். டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அவர் பக்கவாத நோயினால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அவருடைய நெஞ்சில் இருந்து கால் வரை செயல் இழந்துவிட்டது. பயங்கர நோயினால் பாதிக்கப்பட்ட ரூஸ்வெல்ட், மனம் தளர்ந்துவிடவில்லை. டாக்டர்களின் யோசனைப்படி, பல பயிற்சிகளைச் செய்தார். ஊன்று கோல் உதவியுடன் நடக்கும் அளவுக்கு குணம் அடைந்தார். அவர் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில், ஒரு கார் தயாரிக்கப்பட்டது. இப்படி உடல் ஊனமுற்றபோதிலும், அவருடைய மதிநுட்பத்தால் அரசியலில் புகழ் பெற்றார்.
கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பல சிறந்த திட்டங்களை அமுல் நடத்தினார். மக்கள் மத்தியிலும், அரசியலிலும் அவர் செல்வாக்கு உயர்ந்தது. 1933-ல், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஒரு கோடியே 70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்ல; தொடர்ந்து நான்கு முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றுப் புகழ் பெற்றார். யுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த ரூஸ்வெல்ட், 1945 ஏப்ரல் 12-ந்தேதி மூளையில் ரத்தக்குழாய் வெடித்து மரணம் அடைந்தார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன், ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றார். ட்ரூமன் மிகுந்த திறமைசாலி. அரசியல் வியூகங்கள் வகுப்பதில் வல்லவர். யுத்தத்தில், ரூஸ்வெல்ட்டுக்கு முக்கிய ஆலோசனைகள் கூறி வந்தவர் அவர்தான். ரூஸ்வெல்ட் மறைவினால், போரில் அமெரிக்காவின் முன்னேற்றம் தடைப்படும் என்று பலர் எண்ணினார்கள். ஆனால், போரையே முடிவுக்குக் கொண்டுவரும் சக்தி படைத்தவராக ட்ரூமன் விளங்கினார். "இரண்டாம் உலகப்போரின் மாவீரர்" என்ற புகழ், ரூஸ்வெல்ட்டுக்கு பதிலாக ட்ரூமனுக்குத்தான் கிடைத்தது.
ஹிட்லரின் காதலி
ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.
சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
முசோலினி டிஸ்மிஸ்
இரண்டாம் உலகப்போரில், ஹிட்லருக்கு அடுத்த பெரிய சர்வாதிகாரியான முசோலினி போரில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 1943 ஜுலையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஹிட்லர் வாழ்க்கையைப் போலவே, முசோலினியின் வாழ்க்கையும் திகிலும், திருப்பங்களும் நிறைந்தது.
இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜுலை 29-ந்தேதி பிறந்தவர் முசோலினி. தாயார் பள்ளி ஆசிரியை. அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை, "மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலரவேண்டும்" என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார். அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றறிந்த அவர், பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். ஆசிரியர் தொழிலை விட்டு சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின.
ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையானபோது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர். மறுநாளே, "அவந்தி" என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப்போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். 1919-ல் உலகப்போர் முடிந்தது. போரில், இத்தாலியில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தாண்டவமாடின. நாட்டில் கலகங்கள் மூண்டன. இந்தச் சூழ்நிலையில் 1920-ல் "பாசிஸ்ட்" கட்சியை முசோலினி தொடங்கினார். 1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியா விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித்தலைவரான முசோலினி, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற்பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின.
பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிருந்தார் முசோலினி. அதுமட்டுமல்ல, ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப்பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார். ரவுடிகள் சாம்ராஜ்யம் மக்கள் தன் பேச்சில் மயங்கிக்கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், பொது மக்களையும் அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். ஊழியர்களை விரட்டி அடித்துவிட்டு, அலுவலகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.
1922 அக்டோபரில், முசோலினியின் "கருஞ்சட்டைப்படை" இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சரவையை ராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப்பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார். அடக்கு முறை ஆட்சிக்கு வந்த முசோலினி, "இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்துவிடுவேன்" என்று அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்ல. தன் எதிரிகளைச் "சிரச்சேதம்" செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்கு இயந்திரக்கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது. வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார் முசோலினி. அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார்.
1922-ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர். அதைத்தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும், ஆயுதத் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார். இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள்.
இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தாள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மக்கள் புகழ்ந்தனர். பிறகு போரின் போக்கு மாறியது. மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். போர் முனையில் இத்தாலி ராணுவம் தோல்வியை சந்தித்ததால்முசோலினியை 1943 ஜுலை 9-ந்தேதி "பாசிஸ்ட்" கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. அவரையும், அவர் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் கைது செய்து, வீட்டுக் காவலில் சிறை வைத்தது.
முசோலினியின் கோர முடிவு
முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.
மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.
2 ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.
இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.
கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
காதலியுடன் தற்கொலை
1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.
உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.
அணுகுண்டு வீச்சு
ஹிட்லர் இறந்தபின் இனி சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை என்று ஜெர்மனி தளபதிகள் முடிவு செய்தனர். அதன்படி 1945 மே 8-ந்தேதி ஜெர்மனி சரணாகதி அடைந்தது. நேச நாடுகளின் தளபதி மக்ஆர்தரிடம் ஜெர்மனி தளபதிகள் சரணாகதி பத்திரம் எழுதிக்கொடுத்தனர். அத்துடன் உலகப்போர் முடிந்திருக்க வேண்டும். ஆனால் போரை நிறுத்த ஜப்பான் மறுத்தது. பசிபிக் மகாசமுத்திரத்தில் போய்க்கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசின. கப்பல் தீப்பிடித்து எரிந்து 343 பேர் பலியானார்கள்.
ஜெர்மனி சரண் அடைந்ததும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும், ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் என்ற இடத்தில் சந்தித்துப் பேசினார்கள். 1945 ஜுலை 17-ந்தேதி இந்த சந்திப்பு நடந்தது. "உடனே சரண் அடையுங்கள். இல்லாவிட்டால் ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று மூவரும் ஜப்பானை எச்சரித்துக் கூட்டறிக்கை விடுத்தனர். ஜப்பான் இதை லட்சியம் செய்யவில்லை. தொடர்ந்து போரில் ஈடுபட்டது.
யுத்தம் மேலும் தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்று ட்ரூமன் கருதினார். ஜப்பானை ஒடுக்க அணுகுண்டு வீசுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஜப்பான் மீது அணுகுண்டு வீசுமாறு, விமானப்படைக்கு கட்டளையிட்டார். 1945 ஆகஸ்டு 6-ந் தேதி, ஜப்பானிய நேரம் காலை 8 மணிக்கு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் மீது, "எனோலா கேய்" என்ற பெயருடைய அமெரிக்க போர் விமானம், உலகின் முதல் அணு குண்டை வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "லிட்டில் பாய்" (சின்னப் பையன்).
ஐந்து டன் எடையுள்ளது. அணுகுண்டு வெடித்தபோது இடி முழக்கம் போல பயங்கர சத்தம் கேட்டது. வானத்துக்கும், பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. இரண்டாவது அணு குண்டுவீசப்பட்டதால் ஹிரோஷிமா நகரின் 60 சதவீதப் பகுதிகள், கண் மூடிக் கண் திறப்பதற்குள் தரைமட்டமாயின. 80 ஆயிரம் மக்கள் நொடிப் பொழுதில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர்.
ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும், சரண் அடைய ஜப்பான் மறுத்தது. எனவே, மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 9-ந்தேதி) அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "குண்டு மனிதன்". இதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். (அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சாவு பற்றி, அப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது.)இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ரேடியோவில் பேசினார். "உடனே சரண் அடையாவிட்டால், ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
ஜப்பான் சரணாகதி
போரின்போது ஜப்பானிய மன்னராக இருந்தவர் ஹிரோ ஹிட்டோ. அவர் போரை விரும்பவில்லை. என்றாலும், அவரைக் கேட்காமல் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தவர் பிரதமர் டோஜோ. போரில் ஜப்பான் ஈடுபட அவரே காரணம். போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, அவரை ஜப்பான் மக்கள் புகழ்ந்தனர். ஆனால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது, மக்களின் வெறுப்புக்கு உள்ளானார். ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ மனம் கலங்கினார். 1945 ஆகஸ்டு 9-ந்தேதி ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார். ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசியது வாழ்நாளில் இதுவே முதல் தடவை. அதுமட்டுமல்ல நேச நாடுகளின் சேனாதிபதியாக இருந்து போரை நடத்திய அமெரிக்க தளபதி மக்ஆர்தரைச் சந்தித்து "போருக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" என்றார்.
ஜப்பானிய தளபதிகள், அமெரிக்காவின் "மிசவுரி" என்ற போர்க்கப்பலுக்குச் சென்றார்கள். அங்கு அமெரிக்காவின் பிரதம தளபதி மக்ஆர்தர் இருந்தார். அவரிடம், சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். ஏற்கனவே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால், ஐரோப்பாவில் போர் முடிந்துவிட்டது. இப்போது ஜப்பான் சரண் அடைந்ததைத் தொடர்ந்து உலகப்போர் முடிந்தது.
போருக்கு ஜப்பான் பிரதமர் டோஜாதான் காரணம் என்பது நேச நாடுகளுக்குத் தெரியும். அவரைக் கைது செய்யத் தளபதிகள் சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். என்றாலும் அவர் முயற்சி தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார். அணுகுண்டு வீசப்பட்டதும், ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க தளபதி மக்ஆர்தரை சந்தித்து, ஜப்பான் சரண் அடைவதாக தெரிவித்தார். விசாரணையின்போது, டோஜோ "போருக்கு நான்தான் காரணம்; மன்னர் நிரபராதி" என்று கூறினார்.
டோஜோ குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் சில ஜப்பான் ராணுவ அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று யாராலும் சரியாகக் கணக்கிட இயலவில்லை. போர் வீரர்களும், பொதுமக்களும் மொத்தம் 5 கோடிப்பேருக்கு மேல் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அழிந்தன. நாசமான நகரங்களுக்கு கணக்கே இல்லை. அணுகுண்டு வீச்சினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் படுகாயம் அடைந்த பலர், சில நாட்களில் மரணம் அடைந்தனர். ஹிரோஷிமா நகரில் உள்ள கல்லறைகளில், இறந்தவர்களின் 1,38,890 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அணுகுண்டுகள் வெடித்த போது ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்கள், உடல் வெந்து கருகிப் போனவர்கள் பல லட்சம் பேர்.
போருக்குப்பின்...
ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.
அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.
பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.
பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப்போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.
இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.
இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப்படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
மாலைமலர்
இறந்த பின்னர் அவருடைய இறந்த உடலை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பதே பொதுவான ஒரு கருத்து. ஆனால் சில மீடியாக்கள் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு அதனை மிகவும் ரகசியமாக அழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
ரஷ்யதரப்பிலிருந்து வெளியான படம்
ரஷ்யாவின் பக்கத்திலிருந்து அதற்கு ஆதாரமாக சில படங்களை வெளியிட்டு இது ஹிட்லர் இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சில படங்கள வெளியிட்டு இருந்தது. அப்படங்கள் பொய்யானவை என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள். இல்லை, அது அவரின் இறந்த உடல்தான் என்ரு மற்றொரு சாரார் வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் ஹிட்லர் எந்த சமயத்திலும் தற்கொலை செய்யவில்லை. போரில் தோற்றபின்னர் அவர் அவுஸ்திரியாவிற்கு தப்பிச்சென்று அங்கே மறைந்து வாழ்ந்து அங்கேயே இயற்கை மரணம் அடைந்தார் என்கிறார்கள். எது எப்படியோ எனிமேல் அப்படிப்பட்ட ஒரு மனிதன் இப்பூவுலகில் மறு அவதாரம் எடுக்காமல் விட்டால் சரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக