எண்ணெய் குளியலின் விலைமதிப்பற்ற நன்மைகள்
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
எழுதியது: சத்யா
பங்காற்றியது: டாக்டர் ரேகா குமார், ஆயுர்வேத மருத்துவர் ரேவதி (சென்னை)
எண்ணெய் குளியல் என்றாலே தீபாவளி பண்டிகை நாள் அன்று மட்டும் காலை நடைபெறும் சடங்காக மாறிவிட்டது. ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் வாரம் ஒரு நாளாவது சில நிமிடங்களை ஒதுக்கி எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
எண்ணெய் குளியல் பற்றி சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேவதி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்: எண்ணெய் குளியலை ஆயுர்வேதத்தில் அபயங்க ஸ்நானம் என அழைப்பார்கள். தீபாவளி தினத்தன்று எடுக்கும் எண்ணெய் குளியலை கங்கா ஸ்நானம் என்பர்.
இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே மிகவும் மதிக்கப்படும் சுகாதார செயல்முறை தான் இந்த எண்ணெய் குளியல். ஆயுர்வேதத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் சித்த மருத்துவ முறையிலும் எண்ணெய் குளியல் கடைபிடிக்கப்படுகிறது.
பழங்காலத்தில் இருந்தே எண்ணெய் குளியல்!
பழங்காலத்திலிருந்தே, எண்ணெய் குளியலை எப்படி செய்ய வேண்டும் என ஒரு முழுமையான பரிந்துரைகள் இருந்தது. எண்ணெய் குளியல் எடுக்க ஆண்களுக்கு உகந்த நாட்கள் மற்றும் பெண்கள் உகந்த நாட்களைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பிட்ட எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள், எண்ணெய் தடவிய பின் நீண்ட ஆயுளுக்காக சொல்ல வேண்டிய ஸ்லோகம், மற்றும் எண்ணெய் குளியலுக்கு பிந்தைய பத்திய உணவு முறை என அவற்றை வடிவமைத்து உள்ளனர்.
மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்கு, ஆயுர்வேத குழந்தை பராமரிப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விரிவான எண்ணெய் குளியல் முறை உள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் குழந்தை பெற்ற தாய் விரைவாக மீண்டு வரவும் முக்கிய பங்காற்றும்.
ஆனால் சமீப காலமாக எண்ணெய் குளியல் பழக்கம் இந்தியா முழுவதும் வெகுவாக குறைந்துள்ளது. 5 நாட்களும் வேலை, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்திவிட்டு, வார இறுதி நாட்களில் ஷாப்பிங், சுற்றுலா, சினிமா என கிளம்பி விடுகின்றனர்.
இதனால் இந்த விலைமதிப்பற்ற பழக்கத்தை கடைப்பிடிக்க பலரால் முடிவதில்லை. வாரம்தோறும் ஞாயிறு விடுமுறை நாளில் அனைவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். இது வயதாவதை தள்ளிப்போடும் என்கிறது ஆயுர்வேதம். எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
புத்துணர்வு தரும் எண்ணெய் குளியல்
எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை ஆயுர்வேத மருத்துவர் ரேவதி விளக்கிய நிலையில், அதன் பயன்கள் குறித்து ஈரோட்டைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார்.
எண்ணெய் குளியலின் அறிவியல் பூர்வ பயன்கள் குறித்து அவர் கூறியதாவது: நான்கு நாட்களுக்கு ஒரு நாள் ஆவது எண்ணெய் தேய்த்து குளிக்க ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. எண்ணெய் குளியல் தொடர்பாக வெளிநாடுகளில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
தோல் வறட்சியைத் தடுக்கும்
பலருக்கு வறண்ட தோல் பிரச்னை இருக்கும். கை, கால்கள், முகங்களில் இதனால் சரும வெடிப்பு காணப்படும். இவற்றுடன் வெயிலில் செல்லும் போது அவை புண் ஆக மாறி தோல் நோயை உண்டாக்கும்.
இத்தகைய வறண்ட சருமம் உடையவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால், அவர்களது தோல் வறட்சியடையாமல் இருக்கும். சருமம் பொலிவு பெறும்.
எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், குளிக்க செல்கையில் சோப்பு கட்டியை அப்படியே சருமத்தின் மீது தேய்த்து குளிக்கக் கூடாது. மிக மென்மையாக சோப்பு நுரையை கொண்டு கழுவினால் போதும். அதன் பிறகு இருக்கும் எண்ணெய் பசையை அப்படியே விட்டு விடுவது தான் பயனளிக்கும்.
குழந்தைகளுக்கான பயன்கள்
அமெரிக்காவின் மியாமி மருத்துவ கல்லூரி மற்றும் அலபாமா பல்கலை, கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் தந்து குளிப்பாட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது.
மிக மென்மையாக குழந்தைகளுக்கு எண்ணெய் தடவி நீவி விட்டு குளிக்க வைக்கும் போது, கார்டிசால் எனும் பதற்றத்தை உண்டு பண்ணும் ஹார்மோன் அளவு குறைந்து, குழந்தை சாந்தமடைகிறது என தெரியவந்துள்ளது. மேலும் மூளையில் செரட்டோனின் எனும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. நன்கு பசியை தூண்டுகிறது. ரிலாக்ஸாக உணர வைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை தருகிறது என கண்டறிந்துள்ளனர்.
சிலர் குழந்தைகளை படுக்க வைத்து கடுமையாக எண்ணெய் தடவி, கதற கதற மசாஜ் செய்கிறார்கள். அப்படி செய்ய கூடாது.
சளி பிடிக்குமா?
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சளி பிடிக்கும் அபாயம் இருப்பதாக கருதி, பலர் விருப்பம் இருந்தும் எண்ணெயை தொடுவதில்லை. இது குறித்து மருத்துவர் அருண்குமார் கூறியதாவது: சளி, காய்ச்சல் போன்றவை வெளியில் இருந்து தொற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சளி பிடிக்காது. எனவே பயமின்றி குளிக்கலாம். என்றார்.
எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்!
எண்ணெய் குளியலுக்கு எந்தெந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என ஆயுர்வேத மருத்துவர் ரேவதி விளக்கினார். நமக்கு எளிதாக கிடைக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தியே எண்ணெய் குளியல் எடுக்கலாம். அதனை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தடவி தேய்த்து ஊற விட்டு அரை மணி நேரம் கழித்து குளித்தால் புத்துணர்வு கிடைக்கும். நல்லெண்ணெய்யில் ஆன்டிசெப்டிக் தன்மை உண்டு. தோலில் உள்ள தீங்கு தரும் நுண்ணுயிரிகளை கொல்லக் கூடும்.
நல்லெண்ணெய் வாசம் பிடிக்காதவர்கள் தைல எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவற்றை சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய் உடன் கலந்து தான் பயன்படுத்த வேண்டும். அப்படியே பயன்படுத்த உகந்தது அல்ல.
வாத உடம்பு எனில் நல்லெண்ணெய்யில் ஒரு பல் பூண்டை தட்டிப் போட்டு, சூடு காட்டி பயன்படுத்துங்கள். பித்த உடம்பு எனில் ஒரு அரு நெல்லிக்காயை ஒன்றை எண்ணெயில் உடைத்துப் போட்டு சூடு பண்ணி பயன்படுத்தலாம். கபம் உடம்பு எனில் இரண்டு மிளகை பொடித்து போட்டு நல்லெண்ணெயை சூடு செய்து பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.